பேட் ஹேபிட்ஸ் மட்டுமில்ல மக்கள்ஸ்.. இதால கூட கேன்சர் வரலாம்.. சாக்ரத !

நம்மில் பல பேர், புகை பிடிக்கிறது, புகையிலை உபயோகிக்கிறது மாதிரியான கெட்ட பழக்கங்கள் இருந்தாதான் புற்றுநோய் வரும்னு நினைச்சிட்டு இருக்கோம். ஆனா, எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவங்களுக்கும் புற்றுநோய் இருக்குன்னு கேட்கும்போது, நமக்கே ஒரு பயம் வந்துடுது. நம்ம வீட்டுல நாம தெரியாம உபயோகப்படுத்திட்டு இருக்க சில பொருட்கள் தான் இதுக்குக் காரணம். சமைக்கிறதுக்கு, சாப்பாட்ட சேமிச்சு வைக்கிறதுக்குன்னு நாம பயன்படுத்தற சில பொருட்கள், நம்மள அறியாமலேயே நமக்கு ஆபத்த உருவாக்கிட்டிருக்கு. கடைகள்ல வாங்கி குடிக்கிற குளிர்பானங்கள், தண்ணி பாட்டில்கள்ல கூட இந்த ஆபத்து இருக்கு. இந்தப் பொருட்கள்ல காலப்போக்குல ஏற்படற ரசாயன மாற்றங்கள் தான், நம்மள இந்த நிலைமைக்குத் தள்ளுது. சரி, நம்ம வீட்டுல இருக்கிற, புற்றுநோய் அபாயத்த உருவாக்கிற சில பொருட்கள் என்னென்னன்னு இப்போ பார்க்கலாம்.

நான்-ஸ்டிக் பாத்திரங்கள்ல சமைச்சா சாப்பாடு ஒட்டாது, அடிப்பிடிக்காதுன்னு அவங்கள பயன்படுத்துறோம். ஆனா, இந்த நான்-ஸ்டிக் பாத்திரங்கள் ரொம்ப சூடானா, அதுல இருக்கிற ரசாயனங்கள் வெளிய வந்து, நமக்குத் தீங்கு விளைவிக்கும். இதுல இருக்கிற பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலம், மத்த நச்சு கலவைகள் எல்லாம் சேர்ந்து, புற்றுநோய் உட்பட பல உடல்நலப் பிரச்சனைகளை உருவாக்கும். இத தொடர்ந்து பயன்படுத்தினா, நாளடைவில் சிறுநீரகம், விதைப்பை புற்றுநோய் வர வாய்ப்பு இருக்கு. இதுக்கு பதிலா ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், வார்ப்பிரும்பு, பீங்கான் பாத்திரங்கள்ல சமைக்கலாம். நான்-ஸ்டிக் பாத்திரங்கள முழுசா தவிர்க்க முடியலேன்னா, குறைந்த தீயில சமைக்க பயன்படுத்துங்க. எவர்சில்வர் கரண்டிகளை வைச்சு சமைங்க.
தண்ணீர் எடுத்துட்டுப் போகவும், வீட்டுல சேமிச்சு வைக்கவும் முடிஞ்ச வர பிளாஸ்டிக் பாட்டில்களைத் தவிர்ப்பது நல்லது. பிளாஸ்டிக் பாட்டில்கள்ல இருக்கிற பிஸ்பெனால் ஏ (BPA), பித்தலேட்டுகள் மாதிரியான ரசாயனங்கள், நம்ம உடம்புல இருக்கிற ஹார்மோன்கள சமநிலைய கெடுத்துடும். இந்த நச்சுப் பொருட்கள், வெப்பம் அதிகரிக்கும்போது, தண்ணீல கலந்து, நம்ம உடம்புக்குள்ள போயிடும். சூரிய வெப்பத்துல கார்ல பாட்டில வைக்கறப்போ, இந்த பாதிப்பு இன்னும் அதிகமாகும். பிஸ்பெனால் ஏ ரசாயனத்தை அதிகமா பயன்படுத்துறது மூலமா, மார்பகப் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் வர வாய்ப்பு இருக்குன்னு சில ஆராய்ச்சிகள் சொல்லுது. முடிஞ்ச வர கண்ணாடி அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாட்டில்களைப் பயன்படுத்துங்க. பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை மறுபடியும் மறுபடியும் பயன்படுத்தாதீங்க. அதே மாதிரி அதிக வெப்பத்துல வைக்காதீங்க.
சில பேர் சாப்பாட்ட அலுமினிய ஃபாயில்ல சுத்தி வைப்பாங்க. இது எளிதான வழி என்பதால இதை செய்யுறாங்க. வேற சிலர் பேக்கிங் செய்யறதுக்கு இதைப் பயன்படுத்துவாங்க. அலுமினியம், குறிப்பா புளிப்பு சாப்பாட்டுல அதிகமா கலந்துடும். அலுமினியத்தை அதிகமா பயன்படுத்துனா, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், மார்பகப் புற்றுநோய் வர வாய்ப்பு இருக்கு. சாப்பாட்ட சுத்தி எடுத்துட்டு போக வாழை இலையைப் பயன்படுத்துங்க. பேக்கிங் செய்ய ஃபாயில் பேப்பருக்கு பதிலா கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரங்களைப் பயன்படுத்துங்க.
டப்பர்வேர் மாதிரியான பிளாஸ்டிக் பொருட்கள்ல சாப்பாட்ட எடுத்துட்டு போறது பாதுகாப்பானதுன்னு நினைக்கிறாங்க. ஆனா, அதுலயும் பிபிஏ, பித்தலேட்டுகள், டையாக்சின்கள் மாதிரியான நச்சுப்பொருட்கள் இருக்கு. இந்த பொருட்கள்ல சாப்பாட்ட வைச்சு மைக்ரோவேவ்ல சூடாக்கும்போது, சாப்பாட்டுல கலந்துடும். இதனால புற்றுநோய் வர வாய்ப்பு இருக்குன்னு சில ஆராய்ச்சிகள் சொல்லுது. முடிஞ்ச வரைக்கும் சாப்பாட்ட கண்ணாடி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது சிலிகான் பாத்திரங்கள்ல வைங்க. மைக்ரோவேவ்ல வைக்கலாம்னு சொல்லி இருந்தாலும், பிளாஸ்டிக் பொருட்கள்ல சாப்பாட்ட வைச்சு சூடாக்காதீங்க.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்ல ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அதிகமா இருக்கு. எண்ணெய் தயாரிக்கறப்போ இது அதிக வெப்பத்துக்கு உள்ளாகும்போது, டிரான்ஸ் கொழுப்புகள், ஃப்ரீ ரேடிக்கல்கள் உருவாகும். இது புற்றுநோய், குடல் சம்பந்தப்பட்ட நோய்கள், இதய நோய்கள் வர காரணமாகும். இதுக்கு பதிலா ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் மாதிரியான குளிர்ச்சியா பிழிஞ்சு எடுத்த எண்ணெய்களைப் பயன்படுத்துங்க. ஒரே எண்ணெய பல முறை சூடு பண்ணி பயன்படுத்தாதீங்க.
மணம் வீசற மெழுகுவர்த்திகள் வீட்டுக்கு ஒரு புது மணத்தைக் கொடுக்கும். ஆனா, அதுல இருந்து பென்சீன், டோலுயீன் மாதிரியான ரசாயனங்கள் வெளிய வரும். இதுவும் புற்றுநோய உருவாக்கும். மெழுகுவர்த்திகள்ல பயன்படுத்தற பாரஃபின் மெழுகு எரியும்போது வரக்கூடிய புகை சுவாசம், நுரையீரல் சம்பந்தப்பட்ட புற்றுநோய்களை உருவாக்கும். இதுக்கு பதிலா தேனீ மெழுகு அல்லது சோயா மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்துங்க. நல்ல மணத்தோட நச்சு இல்லாத சூழலை உருவாக்க எஸ்ஸென்ஷியல் ஆயில் டிஃப்பியூசர்களைத் தேர்வு செய்யலாம்.
நாம வீட்டுல உபயோகிக்கிற பிளாஸ்டிக் வெட்டும் பலகைகள் நாளடைவில் தேய்ஞ்சு போயிடும். காய்கறிகளை வெட்டும்போது சின்னச் சின்ன பிளாஸ்டிக் துகள்கள் உணவுல கலந்துடும். இந்த மைக்ரோபிளாஸ்டிக்ல இருக்கிற ரசாயனங்கள் நம்ம உடம்புல இருக்கிற ஹார்மோன் சமநிலைய கெடுத்து, புற்றுநோய உருவாக காரணமாகும். முடிஞ்ச வரை மரத்துல அல்லது மூங்கில்ல செய்யப்பட்ட வெட்டும் பலகைகளைப் பயன்படுத்துங்க. பழைய கீறப்பட்ட பிளாஸ்டிக் வெட்டும் பலகைகளைப் பயன்படுத்தாதீங்க.




