தமிழ்நாட்டில் கொலை நடக்காத நாளே இல்லை: அன்புமணி ஆவேசம்

சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கொடூரக் கொலைகள் நடைபெறுவதால் சட்டம் – ஒழுங்கு நிலைமை சீர்கெட்டுவிட்டது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 100 அடி சாலையில் மனோஜ் என்ற கஞ்சா வணிகர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். காவல்நிலையத்தில் கையெழுத்திட சென்றபோது அவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது, தமிழகத்தில் கொலையாளிகள் காவல்துறையை அச்சமின்றி செயல்படுவதை காட்டுகிறது.
காரைக்குடி கொலையின் பதட்டம் தணியும் முன்பே திருத்தணி அருகே 19 வயது இளைஞர் 15 இடங்களில் வெட்டி கொலை செய்யப்பட்டார். தொலைக்காட்சியில் ஒரு தலைப்புச் செய்தி முடிந்து அடுத்த தலைப்புச் செய்தி வருவதற்குள் அடுத்தக் கொலை நடக்கும் அளவுக்கு கொலைகளின் எண்ணிக்கையும் வேகமும் அதிகரித்துள்ளது.
நெல்லையில் ஜாகிர் உசேன், ஈரோடு நசியனூரில் ஜான், காரைக்குடியில் மனோஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் நிகழ்ந்த 3 கொடியக் கொலைகளையும் காவல்துறை தடுக்க முடியுமாயிருந்தது.
ஜாகிர் உசேன் தமது உயிருக்கு அச்சம் இருப்பதாக காவல்துறையிடம் தெரிவித்திருந்தார். மற்ற இருவரும் குற்றப்பின்னணி கொண்டவர்கள். காவல்துறை அலட்சியமாக இருந்ததால் இந்தப் படுகொலைகள் நடந்துள்ளன.
இந்த மூன்று படுகொலைகளும் திடீரென உணர்ச்சி வேகத்தில் நடந்தவை அல்ல. இவை நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டவை. பல நாட்கள் ஒத்திகையும் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கொலைகள் திட்டமிடப்படும் போது அவற்றை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க வேண்டும். ஆனால், காவல்துறை கோட்டை விட்டதால், கொலை நடந்த பிறகு குற்றவாளிகளை பிடிக்க முயல்கிறது. இது காவல்துறைக்கு அழகு அல்ல.
கொலை நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம் என்றாலும், தமிழக அரசு சட்டம் – ஒழுங்கைக் காக்கத் தவறியதை நியாயப்படுத்த முடியாது. தினசரி கொலைகள் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் மோசமாக சீரழிந்து வருவதையே காட்டுகின்றன. தமிழக அரசு விழித்துக் கொண்டு சட்டம் – ஒழுங்கைக் காக்கவும், குற்றச்செயல்களைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.




