விண்வெளி மையத்தில் இருந்து பிரிந்த டிராகன்.. நாளை பூமியை அடைகிறார் சுனிதா வில்லியம்ஸ் !

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் பூமிக்கு புறப்பட்டுள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் பூமி கோளுக்கு வருகின்றனர். சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் பிரிந்து, பூமியை நோக்கி கிளம்பியது.

இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை புளோரிடா கடலில் டிராகன் ஸ்பிளாஷ் டவுன் ஆக உள்ளது. அவர்களுடன் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இருவர் டிராகன் விண்கலம் மூலம் பூமி திரும்புகின்றனர். இதை நாசா தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் பூமியை அடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது வருகையை உலக நாடுகள் எதிர்பார்த்துள்ளன.
அமெரிக்காவின் போயிங் நிறுவனம் ஸ்டார்லைனர் என்ற புதிய விண்கலத்தைத் தயாரித்தது. இந்த விண்கலத்தில் பயணித்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தனர்.
10 நாட்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுவிட்டு பூமிக்குத் திரும்பத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் அவர்களால் பூமிக்குத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் ஆட்கள் இன்றி பூமிக்குத் திரும்பியது.
இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் இரு வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. இந்த விண்கலம் மூலம் சுனிதா மற்றும் பேரி வில்மோரை பூமிக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்புகிறார். பூமி திரும்புவதற்காகசர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் பிரிந்துள்ளது.




