விளையாட்டு

சென்னையில் 'ரவிச்சந்திரன் அஷ்வின்' பெயரில் சாலை: மாநகராட்சி கூட்டத்தில் முடிவு

சென்னை: தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின், உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டவர். அவரின் பெயரை கோடம்பாக்கம் மண்டலம், 134-வது வார்டு, ராமகிருஷ்ணாபுரம் 1-வது தெருவுக்கு ‘ரவிச்சந்திரன் அஷ்வின் சாலை’ என பெயரிட மாநகராட்சி அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றியது.

சென்னை மாநகராட்சியில் மாமன்றத்தில் மார்ச் 19-ம் தேதி ரூ.8,405 கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் அதிகமாக மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.1032 கோடி ஒதுக்கப்பட்டது. இதன் விவாதம் ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் முன்னிலையில் மார்ச் 21-ம் தேதி நடந்தது.

கூட்டம் தொடங்கியபோது, மொத்தம் உள்ள 196 கவுன்சிலர்களில் 87 கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனர். பின்னர் நேரம் ஆக ஆக அனைவரும் வரத் தொடங்கினர். இறுதியில் மொத்தம் 180 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், கவுன்சிலர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதியை ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், சொத்து வரியை உயர்த்தியும் பற்றாக்குறை பட்ஜெட் உள்ளது என்றார். அதற்கு பதிலளித்த மேயர் ஆர்.பிரியா, “ஆண்டுதோறும் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தினால் நிதி வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் ரூ.350 கோடி வழங்கவில்லை” என்றார். இறுதியில் மாமன்ற கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கவுன்சிலர்கள் கோரிக்கையை அடிப்படையாக கொண்டு, கடந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களுக்கு ஆண்டு பராமரிப்பு தொகை ரூ.10 லட்சம் ஏப்.1-ம் தேதி முதல் வழங்கப்படும் என மேயர் அறிவித்தார். மாநகராட்சிக்கு சொந்தமான 65 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை டியுசிஎஸ் கூட்டுறவு சங்கம் மூலம் தொடங்க அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின், உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டவர். அவரின் பெயரை கோடம்பாக்கம் மண்டலம், 134-வது வார்டு, ராமகிருஷ்ணாபுரம் 1-வது தெருவுக்கு ‘ரவிச்சந்திரன் அஷ்வின் சாலை’ என பெயரிட மாநகராட்சி அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றியது. மொத்தம் 97 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button