உலகம்

பூமி திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் வரும் 19-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்புகிறார். 9 மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் தங்கியிருப்பதால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மற்ற விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பாதிப்புகள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து 1998-ம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நிறுவின. பூமியிலிருந்து சுமார் 460 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த விண்வெளி நிலையம், மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறது.

109 மீட்டர் நீளம், 73 மீட்டர் அகலம், 45 மீட்டர் உயரம் மற்றும் 450 டன் எடை கொண்ட இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் 7 பேர் கொண்ட குழு ஒன்று தங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்தக் குழுவினர் மாற்றப்படுவது வழக்கம். 2011-ம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்கலங்களை அனுப்பும் பணியை அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு முற்றிலுமாக நிறுத்திவிட்டது. தற்போது அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலமும், ரஷ்யாவின் சோயூஸ் விண்கலமும் மட்டுமே சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று திரும்புகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் போயிங் நிறுவனம் ஸ்டார்லைனர் என்ற புதிய விண்கலத்தைத் தயாரித்தது. இந்த விண்கலத்தில் பயணித்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தனர்.

10 நாட்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுவிட்டு பூமிக்குத் திரும்பத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் அவர்களால் பூமிக்குத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் ஆட்கள் இன்றி பூமிக்குத் திரும்பியது.

இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் இரு வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. இந்த விண்கலம் மூலம் சுனிதா மற்றும் பேரி வில்மோரை பூமிக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டது.

தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர், நிக் ஹேக், டான் பெடிட், ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸி, இவான் வேக்னர், அலெக்சாண்டர் உள்ளிட்ட 7 பேர் தங்கியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அமெரிக்காவைச் சேர்ந்த ஆனி மெக்லைன், நிகோல் அயர்ஸ், ஜப்பானைச் சேர்ந்த டகுயா ஒனிஷி, ரஷ்யாவைச் சேர்ந்த கிரிஸ் பெஸ்கோஸ் ஆகிய 4 பேர் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் புறப்பட்டனர்.

புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்ட டிராகன் விண்கலம் நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக இணைந்தது. புதிதாக வந்த 4 விண்வெளி வீரர்களையும் சுனிதா உள்ளிட்ட 7 வீரர்களும் ஆரத்தழுவி வரவேற்றனர். அடுத்த சில நாட்களில் புதிய வீரர்களிடம் பணிகளை ஒப்படைத்துவிட்டு, சுனிதா உள்ளிட்ட 4 வீரர்கள் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்ப உள்ளனர்.

இதுகுறித்து நாசா விண்வெளி அமைப்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில், “மார்ச் 19-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து டிராகன் விண்கலம் மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர், நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் பூமிக்குத் திரும்ப உள்ளனர். வானிலையைப் பொறுத்து இந்தத் தேதி மாற்றப்பட வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கும் மேலாகத் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் இதர வீரர்களுக்குப் பூமிக்குத் திரும்பியதும் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும்.

விண்வெளியில் தங்கியிருந்ததால் அவர்களின் எலும்புகள் மற்றும் தசைநார்கள் பலவீனமடைந்திருக்கும். தோலின் தன்மையும் மாறி மென்மையாக மாறியிருக்கும். கண்பார்வை பாதிக்கப்பட்டிருக்கும். கதிரியக்க பாதிப்பால் செல்கள் மற்றும் ரத்த அணுக்களும் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

பூமிக்குத் திரும்பியதும் அவர்களுக்குத் தலைவலி, தலைசுற்றல், வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். எலும்பு மற்றும் தசைநார்கள் பலவீனம் காரணமாக அவர்களால் தரையில் கால் ஊன்றி நடக்க முடியாது. சுமார் 3 மாதங்கள் முதல் ஓராண்டுக்குப் பிறகே சுனிதா உள்ளிட்டோர் இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள்.

நாசாவின் சம்பளப் பட்டியலில் ஜிஎஸ்-15 கிரேடில் இடம் பெற்றுள்ள சுனிதா வில்லியம்ஸுக்கு ஓராண்டில் ரூ.1.41 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்கள் தங்கியிருந்ததற்காக அவருக்கு ரூ.1.05 கோடியும், இதர படிகள் வாயிலாக ரூ.1.06 கோடியும் கிடைக்கும் என்று நாசா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் நாளை பூமிக்கு திரும்பும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button