உலகம்

கல்வித்துறை மேல் கைவைத்த ட்ரம்ப்.. அதிரும் அமெரிக்கா !

வாஷிங்டன்: அமெரிக்க கல்வித் துறையை கலைக்கும் ஆவணங்களில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். ஜனவரியில் பொறுப்பேற்றதில் இருந்து ட்ரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார், பெரும்பாலானவற்றுக்கு செலவினக் குறைப்பையே அவர் காரணமாகக் கூறி வருகின்றார்.

மேலும், கல்வித் துறையை மாகாணங்கள் பட்டியலுக்கு மாற்றும் பணிகளை வேகமாகச் செய்யவும் கல்வித் துறை செயலாளருக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஒரே ஆறுதலாக, சிறப்பு மாணவர்களுக்கு நிதித் திட்டங்களை அமெரிக்க அரசு தொடர்ந்து வழங்கும் என்றார்.

அமெரிக்க கல்வித் துறையின் கீழ் சுமார் 1 லட்சம் அரசுப் பள்ளிகளும், 30 ஆயிரம் தனியார் பள்ளிகளும் செயல்படுகின்றன. இப்பள்ளிகளின் 85% செலவுகளை மாகாண அரசுகள் மேற்கொள்கின்றன. ஆனாலும், கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு கடன் தொகையை அமெரிக்க மத்திய கல்வித் துறை வழங்கி வருகிறது. இதனால், டிரில்லியன் டாலர்களுக்கு மேல் கடன் தொகைகள் வழங்கப்படுகின்றன, இது மத்திய கல்வி துறைக்கு பெரும் சுமையாக உள்ளது.

இந்த நிதிச் சுமையை குறைக்கும் நடவடிக்கையாக, கல்வித் துறையை கலைத்து முழு பொறுப்பையும் மாகாண அரசுகளிடம் ஒப்படைக்கும் ஆவணங்களில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. குறிப்பாக குடியரசுக் கட்சி கடுமையாக விமர்சிக்கிறது. கல்வியின் தரத்தை கண்காணிக்கும் துறையை கலைப்பது ஏன் என்று கல்வி ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏற்கெனவே, அரசு ஊழியர்களை பணி நீக்க நடவடிக்கையில், கல்வித் துறையைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கல்வி துறையை கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளார் ட்ரம்ப்.

இந்த நடவடிக்கையைப் பற்றி ட்ரம்ப் பேசுகையில், “45 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஒரு நடவடிக்கையை மேற்கொள்கிறோம். அமெரிக்க கல்வித் துறையை கலைப்பதன் மூலம் குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் நன்மை சேர்க்கும். தோல்வியடைந்த அமைப்பின் பிடியிலிருந்து அவர்கள் விடுபடுவார்கள். கல்வியை மாகாண அரசுகளுக்கு ஒப்படைக்கிறோம். கல்வியின் பொறுப்பு அவர்களுடையதே. இந்த முடிவு பொது அறிவின் அடிப்படையில் எடுக்கப்பட்டது மற்றும் நிச்சயமாக நன்மை பயக்கும். உலக நாடுகளை ஒப்பிடுகையில் அமெரிக்கா தான் மாணவர்கள் மீது அதிகம் செலவிடுகிறது. ஆனால் இங்குள்ள 8-ம் நிலை மாணவர்களில் 70% பேருக்கு வாசிக்கத் தெரியவில்லை, கணித அறிவும் இல்லை. ஆனால் கல்வித் துறையின் செலவு 600% அதிகரித்துள்ளது. கல்வித் துறை அதிகாரிகள் மீதான செலவினங்கள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த நடவடிக்கை மிகவும் பொருத்தமானது” என்று கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button