
பாகிஸ்தானிடம் 130 அணுகுண்டுகள் உள்ளன என இந்தியாவை மிரட்டும் படி பேசியுள்ளார் பாகிஸ்தான் அமைச்சர் ஹனீஃப் அப்பாஸி.
இஸ்லாமாபாத், ஏப்.27 2025:

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி, “எங்களிடம் 130 அணு ஆயுதங்கள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனீஃப் அப்பாஸி, “இந்தியா தண்ணீரை நிறுத்தினால், அவர்கள் போருக்குத் தயாராக இருக்க வேண்டும். எங்களிடம் கோரி, ஷாஹீன் மற்றும் கஸ்னவி ஆகியவை வெறுமனே காட்சிக்கு அல்ல. நாங்கள் அவற்றை இந்தியாவுக்காக வைத்திருக்கிறோம். எங்களிடம் 130 அணுகுண்டுகள் உள்ளன. அவை பாகிஸ்தானில் அமைந்துள்ள இடம் உங்களுக்கு தெரியாது” என்றார்.

இவ்வளவு பதற்றம் ஏன்…?
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட பஹல்காம் தாக்குதல் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகள், உள்ளூர் பயங்கரவாதிகளுடன் இணைந்து சுற்றுலாப் பயணிகள் உள்பட 27 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடியாக இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. இதையடுத்து, பாகிஸ்தான் அமைச்சர்கள் வாய்க்கு வந்தபடி உளறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது




