Uncategorized

நீதிபதி வீட்டில் பணம் எரிந்த விவகாரம்: வீடியோ வெளியிட்டு உறுதி செய்த உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் பாதியாக எரிந்த நிலையில் இருந்த பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அரசு இல்லம் துக்ளக் சாலையில் அமைந்துள்ளது. கடந்த 14ஆம் தேதி இரவு, அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும், தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தின் போது, அறையிலேயே கட்டுக்கட்டாக பணம் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்து அரசுக்கு தகவல் தெரிவித்தனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு 15ஆம் தேதி இதுகுறித்து தகவல் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, பணம் கைப்பற்றப்பட்ட விவரங்கள் குறித்து நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் விளக்கத்துடன் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில், யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றும் முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், 22ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய், நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து, விசாரணை நடத்துவதற்காக பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவிற்கு விசாரணையை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை. மேலும், யஷ்வந்த் வர்மாவுக்கு எந்த பணியும் வழங்க வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக் குழு அறிக்கையை தாக்கல் செய்யும் வரை, அவரின் பணியிட மாற்ற உத்தரவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் மீட்கப்பட்ட பணம் தொடர்பாக காவல் ஆணையர் சஞ்சய் அரோரா வழங்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம், அவரது வீட்டில் பணம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பைகளில் பாதியாக எரிந்த நிலையில் இருந்த பணத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்ட வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் ரூபாய் நோட்டுகளில் உள்ள மகாத்மா காந்தி படத்தை குறிப்பிட்டு, “மகாத்மா காந்தி தீயில் எரிகிறார்” எனக் கூறுவதை கேட்கலாம்.

இந்த சம்பவத்துடன் தங்களுக்குக் எந்தவித தொடர்பும் இல்லை என நீதிபதி யஷ்வந்த் வர்மா மறுப்பு தெரிவித்துள்ளார். “அந்த பணம் எங்களுக்குச் சேர்ந்ததல்ல. மேலும், எங்கள் பயன்படுத்தும் பகுதியிலிருந்து பணம் கைப்பற்றப்படவில்லை” என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதற்கிடையே, சம்பவம் நடந்த பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த இந்திரஜித் என்பவர், “நான்கு நாட்களுக்கு முன்பு, குப்பைகளை சேகரிக்கும்போது சில 500 ரூபாய் நோட்டுகள் பாதியாக எரிந்த நிலையில் கிடைத்தன. இன்றும் சில எரிந்த பணம் கிடைத்தன” என்று தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button