மத்திய அரசை எதிர்க்க.. தமிழக அரசுடன் இணைந்து தேமுதிக போராடும்- பிரேமலதா அதிரடி

பழநி: தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழகத்திற்கான தொகுதிகளின் எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்தால் மக்களுக்கு ஆதரவாக மத்திய அரசை எதிர்த்து, தமிழக அரசுடன் இணைந்து தேமுதிக போராடும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பழநியில் தேமுதிக கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தேமுதிக வரவேற்கிறது. ஏனெனில், 2006ஆம் ஆண்டு தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பல்வேறு அறிவிப்புகள் இந்த ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக, தமிழக விவசாயிகளை பல்வேறு நாடுகளுக்கும் அழைத்துச் சென்று வேளாண் தொழில்நுட்பங்களை அறிந்து அதற்கேற்ப தமிழகத்தில் விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு மிகவும் முக்கியமானது. மெட்ரோ ரயில், பெண்களுக்கான திட்டங்களையும் அறிவித்துள்ளனர்.
வேலைவாய்ப்புக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் அளித்திருக்கலாம். டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக கூறப்படுவதன் உண்மைத்தன்மை குறித்து அமலாக்கத் துறை விசாரித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இதையும் படிங்க.. டாஸ்மாக் ஊழலில் சிறு மீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்- விஜய்
தாய் மொழியாம் தமிழ் மொழியை காப்போம், அனைத்து மொழிகளையும் கற்போம் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. தொகுதி மறுவரையறை என்ற பெயரில் மத்திய அரசு தமிழகத்தை பாதிக்கும் வகையில் செயல்பட்டால், தமிழக மக்களுக்கு ஆதரவாக மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசுடன் இணைந்து தேமுதிக போராடும் என்றார்.




