அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு: டிஎஸ்பி ராஜினாமா

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் விசாரணை அதிகாரியாக பணியாற்றிய டிஎஸ்பி திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த வழக்கின் எப்ஐஆர் வெளியானதாகவும் தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதே நேரத்தில், அண்ணாநகரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு என 3 வழக்குகளையும் பெண் எஸ்பிக்கள் ஜமன் ஜமால், பிருந்தா, ஸ்நேக பிரியா ஆகியோர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் தற்போது பணியில் உள்ள 3 பெண் அதிகாரிகளுக்கும் அவர்கள் வகிக்கும் தற்போதைய பதவிதான் முதல் எஸ்பி பணி. தற்போதுதான் அவர்கள் 2 முக்கிய வழக்குகளை விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த தனிப்படையில் பணியாற்றும் அதிகாரிகள் கீழ் மட்ட அதிகாரிகளுக்கு கடுமையான நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. பெண் அதிகாரிகளின் நெருக்கடி தாங்க முடியாமல் டிஎஸ்பி ராகவேந்திரா கே.ரவி என்பவர் தனது ராஜினாமா கடிதத்தை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.
மேலும், உடனடியாக மருத்துவ விடுப்பிலும் சென்று விட்டதாக கூறப்படுகிறது. ராகவேந்திரா கே.ரவி, அசோக்நகரில் உள்ள சைபர் கிரைமில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்தார். தற்போது, அயல்பணியாக இந்த 3 வழக்குகளின் விசாரணைக்காக தேர்வு செய்யப்பட்டார். இவர் தற்போது ராஜினாமா செய்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.




