
தமிழக அமைச்சர் பொன்முடியின் ஆபாசமான கருத்துக்காக எஃப்ஐஆர் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளது.

சென்னை, ஏப்.17 2025: பெண்கள், சைவர்கள் மற்றும் வைணவர்கள் குறித்து ஆபாசமாகப் பேசியதற்காக வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வியாழக்கிழமை (ஏப்.17 2025) வந்துள்ளது. அதில், அமைச்சர் பொன்முடி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய தமிழக காவல்துறைக்குக்கு உத்தரவிட்டது.
முன்னதாக, தமிழக முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலின் அமைச்சர் பொன்முடி மீதான சலசலப்பை தொடர்ந்து, ஏப்ரல் 11ஆம் தேதியன்று அவரிடம் இருந்த கட்சிப் பொறுப்பை பறித்தார்.
அதாவது, பொன்முடி வகித்து வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. எனினும், பொன்முடி அமைச்சராகத் தொடர்கிறார்.

இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில், உயர் நீதிமன்றம், தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமனை அழைத்து, பொன்முடியின் உரையை சுட்டிக்காட்டியது. அப்போது, அவரது பேச்சு இன்னும் பொதுவில் இருப்பதாகவும், அமைச்சர் மன்னிப்பு கேட்டாலும் அதை புறக்கணிக்க முடியாது என்றும் கூறியது.
பெண்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வழக்குப்பதிவு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.

அமைச்சரின் அவதூறு பேச்சுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது; புகார் இல்லாமலேயே காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
எத்தனை புகார்கள் வந்தாலும் அமைச்சர் பொன்முடி மீது ஒரே வழக்காக பதிவு செய்யுங்கள்; நான்கு, ஐந்து வழக்குகள் பதிவு செய்தால் நீர்த்துப்போய்விடும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தினார்.

மேலும், அமைச்சருக்கு எதிராக காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நடவடிக்கைக்கு முன்னதாக மக்களவை எம்.பி.யும், திமுக மூத்த தலைவருமான கே.கனிமொழியும் இந்தப் பேச்சைக் கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..




