ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திடீர் நெஞ்சுவலி.. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி !

சென்னை:பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்ற பின், சர்வதேச அளவில் ஏ.ஆர்.ரஹ்மான் பிரபலமடைந்தார். அதன்பின் இந்திய திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சர்வதேச திரைப்படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இருப்பினும் தமிழ் மொழியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

கடந்த ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. ஏனென்றால் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மனைவி இடையிலான காதல் தருணங்கள் வெளிப்பட்டுள்ளது. ஜாலியான தம்பதிகளாக பார்க்கப்பட்ட இருவரும், திடீரென பிரிவதாக கூறினர்.
இந்த நிலையில் இன்று திடீரென சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஏ.ஆர்.ரஹ்மான் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.




