கவிஞர் முத்துலிங்கத்திற்கு பாராட்டு: திரையுலகமும் இலக்கியமும் கைகோர்த்த விழா !

சென்னை: தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழா சென்னையில் விமர்சையாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் மற்றும் பல்துறை முக்கியமானோர் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

முத்துலிங்கம் திரைப்பட முத்துக்கள் – நூல் வெளியீடு
“முத்துக்கு முத்தான விழா” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், கவிஞர் முத்துலிங்கம் எழுதிய “திரைப்பட முத்துக்கள்” எனும் நூல் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை நடிகர் சிவகுமார் வெளியிட, முன்னாள் மேயர் சைதை துரைசாமி முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
மேலும், “காற்றில் விதைத்த கருத்து” நூலின் இரண்டாவது பதிப்பும் வெளியிடப்பட்டது. இந்த நூலை தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் வெளியிட, விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விஸ்வநாதன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

கவிஞர் முத்துலிங்கத்திற்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் திரையுலக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்:
- K. பாக்யராஜ் – தலைவர், தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்
- RK செல்வமணி – தலைவர், தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்
- T. சிவா – பொதுச் செயலாளர், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்
- கருணாஸ் – துணைத் தலைவர், தென்னிந்திய நடிகர் சங்கம்
இதன் ஒரு பகுதியாக, K. பாக்யராஜ், கவிஞர் முத்துலிங்கத்திற்கு மகிழ்ச்சியின் அடையாளமாக மோதிரம் அணிவித்து மரியாதை செய்தார்.

விழாவின் சிறப்பு அம்சங்கள்
விழாவின் தொடக்க நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்து வைஜெயந்தி பாட, லியாகத் அலிகான், பொதுச் செயலாளர், தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம், வரவேற்புரை வழங்கினார்.
நிகழ்வின் தொடக்கத்தைக் நடிகைகள் பூர்ணிமாபாக்யராஜ், குட்டி பத்மினி, ரோகிணி, தேவயாணி ராஜகுமாரன், எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷிணி ஆகியோர் குத்து விளக்கேற்றி சிறப்பித்தனர்.
முத்துலிங்கம் குறித்த குறும்படம் – பாராட்டுகளின் வெளிச்சம்!
நிகழ்வின் முக்கியமான அம்சமாக, கவிஞர் முத்துலிங்கம் பற்றிய சிறப்பு குறும்படம் திரையிடப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் மிகுந்த ஆவலுடன் குறும்படத்தை ரசித்து பாராட்டுக்களைக் குவித்தனர்.
இந்த விழா, கவிஞர் முத்துலிங்கத்தின் இலக்கியப் பயணத்திற்கும், திரையுலகத்திற்கும் அவர் செய்த பங்களிப்புகளுக்குமான மகிழ்ச்சியான அங்கீகாரமாக அமைந்தது.



