பள்ளிக் கல்வி மேம்பாட்டில் புதிய முன்னெடுப்புகள்

“நம்ம School நம்ம ஊரு” திட்டத்தின் கீழ் 3.65 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகம், நவீன சமையலறை மற்றும் உணவு அருந்தும் அறையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

மதுரைக்கு வரவிருக்கும் பிரதமரிடம் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து வலியுறுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு புதிய முன்னெடுப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை நாட்டிற்கே முன்மாதிரியாக விளங்குகின்றன. பள்ளிகளின் மேம்பாட்டிற்காக பலதரப்பினரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் “நம்ம School நம்ம ஊரு” திட்டம் 2022 டிசம்பர் 19 அன்று தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், திருவல்லிக்கேணி லேடி விலிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் Virutusa நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதி உதவியுடன் 3.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகம், நவீன சமையலறை மற்றும் உணவகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பள்ளிக் கல்வித் துறைக்கான 5 தட்டச்சர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட செயலாளர் சிற்றரசு, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பி. சந்திரமோகன், பள்ளிக் கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரைக்கு வரவிருக்கும் பிரதமரிடம் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்துவார் என்றும், வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் தெரிவித்தார். மேலும், சட்டசபையில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதை சுட்டிக்காட்டி, அதற்கு நீதி கேட்டு கச்சத்தீவை மீட்பது குறித்த தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டுவந்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.



