
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றிரவு சென்னைக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, தமிழக பாஜகவில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல கூட்டணி விவகாரம் குறித்தும் உறுதியான அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் ஒரே மேடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தோன்றினார்.
உடன், முன்னாள் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையும் அமர்ந்திருந்தார்.
இதன் மூலம் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில், அதிமுக- பாஜக கூட்டணி உறுதியானதை தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அமித் ஷா இதனை கூறினார்.
1998 முதல் அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வருவதாகவும், பிரதமர் மோடியும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கடந்த காலங்களில் இணைந்து பணியாற்றியதாகவும் அமித்ஷா சுட்டிக்காட்டினார்.
யாருக்கு எத்தனை தொகுதி, வெற்றிபெற்ற பின் எப்படி ஆட்சியமைப்பது என்பது பின்னர் விவாதிக்கப்படும். அதிமுக எந்த நிபந்தனையும் இதுவரை வைக்கவில்லை. 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சிதான். தேர்தல் விஷயங்களில் இணைந்து செயல்படுவோம் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அண்ணாமலைக்குப் பதிலாக தமிழ்நாட்டின் புதிய பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்ட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவரது பெயரை அண்ணாமலையே முன்மொழிந்தார் எனவும், தலைவர் பதவிக்கு வேறு யாரும் விருப்ப மனு தராததால் ஒரு மனதாக நயினார் நாகேந்திரன் தேர்வானார் எனவும் கூறப்படுகிறது.

நாளை இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் அவர்கள் மட்டுமே தனது பரிந்துரையை சமர்ப்பித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக அகிலத்தின் தலைவராக அண்ணாமலை மெச்சுதற்குரிய சாதனைகளைப் புரிந்துள்ளார்.மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச்செல்வது, கிராமம் கிராமமாக கட்சியின் திட்டங்களை நிறைவேற்றுவது போன்றவற்றில் அண்ணாமலை அவர்களின் பங்களிப்பு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பானதாக உள்ளது.
இனி அண்ணாமலை அவர்களின் திறனை பாஜக தேசிய அமைப்பில் பயன்படுத்த உள்ளது என மத்திய அமைச்சர் அமித்ஷா எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.




