தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளம்- பட்ஜெட் குறித்து முதல்வர் பெருமிதம்
சென்னை: “எல்லோர்க்கும் எல்லாம்” என்ற உயரிய நோக்கத்துடன், தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கான உறுதியான அடித்தளத்தை அமைத்திருக்கிறது தமிழ்நாடு பட்ஜெட் 2025 என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 14) தாக்கல் செய்யப்பட்ட 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்களைப் பற்றி அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “மகளிர் நலன் காக்கும் பரபரப்பு ஏற்படுத்தும் திட்டங்கள், தமிழ்ப் பெருமிதத்தை ததும்பி ஊக்குவிக்கும் நடவடிக்கைகள், இளைஞர்களுக்கு உலகை வெல்லும் தொழில்நுட்ப வளர்ச்சி, தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்பூங்காக்கள், புதிய நகரம், புதிய விமான நிலையம், புதிய நீர்த்தேக்கம், அதிவேக ரயில் சேவை ஆகியவை நவீன தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும், விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என, அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.”

“எல்லோர்க்கும் எல்லாம்” என்ற உயரிய நோக்கத்துடன், தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கான உறுதியான அடித்தளத்தை அமைத்திருக்கிறது தமிழ்நாடு பட்ஜெட் 2025. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நிதித்துறை அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க.. தமிழக பட்ஜெட் 2025-26/ முக்கிய அறிவிப்புகள்
முன்னதாக, 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் 1 லட்சம் புதிய வீடுகள், மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.




