மிசோராமில் பல நூற்றாண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

மிசோரம் மைதே கிராமத்தில் உள்ள ஒரு பாறைச் சரிவில், ஒரு பெரிய மனித உருவத்தைச் சுற்றி சிறிய மனித உருவங்கள், விலங்குகள், மணிகள், மிதுன் தலைகளின் வரிசை மற்றும் சில அடையாளம் காணப்படாத குறியீடுகள் கொண்ட பழங்கால பாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குவகாத்தி ஏப் 17, 2025
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) மிசோரத்தில் 16 முதல் 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டதாக மதிப்பிடப்பட்ட நான்கு பழமையான பாறை ஓவியத் தளங்களை கண்டுபிடித்ததாக அறிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் சாம்பாய், கவ்சால், சைட்டுவால் மற்றும் செர்ச்சிப் மாவட்டங்களில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ASI குழு ஒரு கிராமம் கிராமமாக நடத்திய ஆய்வின் போது இந்த தலங்கள் பதிவு செய்யப்பட்டன.
சைட்டுவால் மாவட்டத்தின் மைதே கிராமத்தில், ஒரு பாறைச் சுவரில் ஒரு பெரிய மனித உருவத்தைச் சுற்றி சிறிய மனித உருவங்கள், விலங்குகள், மணிகள், மிதுன் (காட்டு எருமை) தலைகளின் வரிசை மற்றும் சில அடையாளம் காணப்படாத குறியீடுகள் காணப்படுகின்றன என்று இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) தெரிவித்துள்ளது. மிதுன் (Bos frontalis) என்பது இப்பகுதியில் காணப்படும் ஒரு வகை காட்டு/அரை-வீட்டு மாடு ஆகும்.

சாம்பாய் மாவட்டத்தின் லியான்புயில் கண்டுபிடிக்கப்பட்ட சிற்பங்களில், ஒரு முக்கிய மனித உருவம், அடுக்கடுக்கான மனித உருவ வரிசைகள், விலங்குகள், மீன்கள், ஈட்டிகள், டாவோ (ஒரு வகை வெட்டுகோல்), மலைக்கோழிகள் மற்றும் செவ்வக அறைகள் போன்றவை அடங்கும். இவை இப்பகுதியின் பழைய கலை வெளிப்பாடுகள் குறித்து முக்கியமான தகவல்களை வழங்குகின்றன.
கவ்சால் மாவட்டத்தில் உள்ள துவால்டே பகுதியில், ஒரு பரந்த பாறை மேற்பரப்பில் செதுக்கப்பட்ட மிதுன் தலைகள், மனித உருவங்கள், வரி அடையாளங்கள் மற்றும் செவ்வக உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதே மாவட்டத்தில் உள்ள சவார்ட்டு பகுதியில், மனித உருவங்கள், மிதுன் தலைகள், மனித தலைகளின் வரிசைகள், தாவரத் தண்டுகள் போன்ற வளைவுகளுடன் கூடிய வட்ட உருவம் மற்றும் மீன் வடிவமைப்பு ஆகியவற்றின் தனித்துவமான கலவையாக செதுக்கப்பட்ட கலைகள் காணப்படுகின்றன.

இந்த கண்டுபிடிப்புகள் மிசோரத்தின் பண்பாட்டு மரபின் செழுமையையும், பண்டைய குடியிருப்பாளர்களின் கலைத் திறனையும் எடுத்துக்காட்டுகின்றன என்று ஆய்வு முடிந்து ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு ASI அறிவித்துள்ளது.
ஆய்வுக் குழுவை ASI-யின் ஐசோல் அடிப்படையிலான உதவி மேற்பார்வையாளரான சலாம் ஷியாம் சிங் தலைமை தாங்கினார். இந்த கண்டுபிடிப்புகள் குறித்த விரிவான அறிக்கை ASI தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

இத்தகைய ஆய்வுகள் அகழ்வாராய்ச்சிக்கு முன்னோடியாகும். இந்த செதுக்குருவங்கள் கிராமங்களில் பல ஆண்டுகளாக இருந்துவருகின்றன என்று உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இவை 16 முதல் 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு உரியவையாகத் தோன்றுகின்றன. மாதிரிகளின் கார்பன் டேட்டிங் முடிவுகளுக்குப் பிறகே உறுதியாகக் கூற முடியும் என்று திரு. சிங் விளக்கினார்.
**மறைந்த நாகரிகம்**
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாறை ஓவியத் தலங்கள், சாம்பாய் மாவட்டத்தில் வாங்சியாவைச் சுற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ளன. ஜனவரி 2016ல், ASI வாங்சியாவை ஒரு முக்கியமான குடியேற்றத்தின் சான்றுகளைக் கொண்டதாக அடையாளம் கண்டது. இது ஒரு “மறைந்த நாகரிகம்” ஆக இருக்கலாம் என்றும், நியோலிதிக் யுகத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் விவரிக்கப்பட்டு “வாழும் வரலாற்று அருங்காட்சியகம்” என்று பெயரிடப்பட்டது.
ஐசோலில் இருந்து 260 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வாங்சியா தலம், சுமார் 45 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்கு பெரிய பாறைகளில் செதுக்கப்பட்ட படவுருக்கள், மென்ஹிர்கள் (நின்று கொண்டிருக்கும் பெரிய கற்கள்), நெக்ரோபோலிஸ் (பெரிய இடுகாடு) மற்றும் பிற தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. குறிப்பாக, ஒரு நீர் மண்டபம் என அடையாளம் காணப்பட்ட கட்டமைப்பும், பல மலைச் சரிவுகளில் காணப்படும் மணற்கற்களில் ஒரு அடியிலிருந்து ஒரு மீட்டர் வரை விட்டம் கொண்ட துளைகளும் குறிப்பிடத்தக்கவை.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சிக்குப் பிறகு, தொல்பொருள் ஆய்வாளர்கள் வாங்சியாவில் பயன்படுத்தப்பட்ட நீர் சேகரிப்பு நுட்பங்களின் “எளிதாகத் தோன்றும் அறிவியல்” பற்றிய கோட்பாடுகளை உருவாக்கினர். இந்த நுட்பங்கள் உள்ளூர் மக்களுக்கு குறைந்தது ஒரு வருடத்திற்கு தண்ணீரை வழங்கும் திறன் கொண்டதாக இருந்திருக்கலாம். மலைச் சரிவுகளில் இயற்கையாக உள்ள பிளவுகள் மற்றும் துவாரங்களைப் பயன்படுத்தி, துளைகளால் மேம்படுத்தப்பட்டு, மழைநீரை எவ்வாறு சேகரித்திருக்கலாம் என்பதை அவர்கள் கவனித்தனர். பெரிய நீர்த்தேக்கங்களைக் கட்டும் திறன் இருந்தும், இந்த இயற்கைத் தழுவல் அவற்றின் தேவையை ரத்து செய்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
துளைகளுக்கான கோட்பாடுகளில் எதிரிகளுக்கு நீர் மூலங்களுக்கான எளிதான அணுகலை மறுப்பது, வேட்டைக்காக விலங்குகளை ஈர்ப்பது மற்றும் சடங்கு நடைமுறைகள் ஆகியவை அடங்கும். எனினும், அனைத்து கோட்பாடுகளும் திறமையான நீர் சேகரிப்பின் முதன்மை செயல்பாட்டில் ஒன்றிணைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.




