
நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க முடியுமா என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருவள்ளூர், ஏப்ரல் 18, 2025

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருவள்ளூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அவர் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், “தமிழ்நாட்டிற்கு NEET தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியுமா?”என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
மேலும், “டெல்லியின் ஆட்சிக்கு தமிழ்நாடு என்றுமே அடிபணியாது” என்று கூறிய ஸ்டாலின், “மற்ற மாநிலங்களில் கட்சிகளை உடைத்து, ரெய்டு மூலம் மிரட்டி ஆட்சி அமைக்கும் பார்முலா தமிழ்நாட்டில் வேலை செய்யாது” என்றும் கடும் விமர்சனம் செய்தார்.
இந்தப் பேச்சு, மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையேயான பூசலை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. NEET விலக்கு மற்றும் மத்திய-மாநில உறவுகள் குறித்து தொடரும் விவாதத்தில் இந்த பேச்சு குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான்; 2026 இல் திராவிட மாடல் ஆட்சி தான்” என்றார்.
நீட் தேர்வு விவகாரம்
மாநில உரிமைகளின் அகில இந்திய முகமாக திமுக திகழ்கிறது என்று கூறிய மு க ஸ்டாலின், “நீட் தேர்வு, மும்மொழி கொள்கை, வக்பு போர்டு திருத்த சட்டம் என திமுக தான் இந்திய அளவில் ஓங்கி குரல் கொடுத்து வருகிறது” என்றார். தொடர்ந்து, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க முடியுமா? இந்த உத்தரவாதத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடுப்பாரா? என்றார்.

நான் அழுது புலம்புபவன் அல்ல
மேலும், முக ஸ்டாலின், ” நாங்கள் நிதி கேட்பது அழுகை அல்ல; அது தமிழ்நாட்டு மக்களின் உரிமை” என்றார். தொடர்ந்து தாம் அழுது புலம்புபவன் அல்ல; யார் காலிலும் ஊர்ந்து போய் விழுபவனும் அல்ல” என்றும் குறிப்பிட்டார்.




