
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன.
ஜம்மு ஏப்ரல் 25 2025
ஜம்மு காஷ்மீரில் வியாழக்கிழமை (ஏப்.24 2025) இரவு பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக நம்பப்படும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதி ஆசிப் ஷேக்கின் வீடு அழிக்கப்பட்டது என செய்தி நிறுவனமான பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் இரண்டு லஷ்கர் பயங்கரவாதிகளான அதில் உசேன் தோகர் மற்றும் ஆசிப் ஷேக் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அப்போது, வீடுகளுக்குள் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்தன எனக் கூறப்படுகிறது. தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெஹாரா தொகுதியைச் சேர்ந்த அதில் உசேன் தோகர், செவ்வாய்க்கிழமை (ஏப்.22 2025) நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படுகிறார்.

மேலும், புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிராலைச் சேர்ந்த ஆசிப் ஷேக், தாக்குதலின் சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதில் உசேன் தோகர் 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு அவர் கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்குத் திரும்புவதற்கு முன்பு பயங்கரவாதப் பயிற்சி பெற்றார் என்றும் கூறப்படுகிறது.




