தமிழகம்

விளைநிலங்களை வீட்டு மனைகளாக்க அனுமதிக்க கூடாது - ராமதாஸ் காட்டம்

விழுப்புரம்: வேளாண் விளைநிலங்களை வீட்டுமனைகள் உட்பட மற்ற பயன்பாடுகளுக்கு மாற்றுவதைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேளாண் விளைநிலங்களை மாற்றுப் பணிக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், கேரள அரசு நெல் விளையும் நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு அனுமதிக்கக் கூடாது எனக் கூறியிருப்பது பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார். ஆனால் தமிழகத்தில் மூன்று போகம் விளையும் நிலமாக இருந்தாலும் அதிகாரிகளின் துணையுடன் வீட்டுமனைப் பட்டாவாக மாற்ற முடிவதாகவும், சிப்காட் போன்ற திட்டங்களுக்கு அரசே விளைநிலங்களை கையகப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய ராமதாஸ், விளைநிலங்களை வீட்டுமனைகளாக்க அனுமதிக்கக் கூடாது என்று தான் தொடர்ந்து வலியுறுத்திப் போராட்டங்கள் நடத்தியதாகவும், இருப்பினும் இதனால் 40 லட்சம் ஹெக்டேர் சாகுபடி பரப்பும், 15,000 ஏரிகளும் காணாமல் போயுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். கேரளாவைப் போல தமிழகத்திலும் இதற்கென தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 30 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து பேசிய அவர், திமுக ஆட்சியில் இதுவே அதிக நாட்கள் நடைபெறும் கூட்டத்தொடர் என்றும், கடந்த காலங்களில் சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடைபெற்றது என்பதை புள்ளி விவரங்களுடன் தான் சுட்டிக்காட்டியதையடுத்து தற்போது கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், இருப்பினும் இது போதுமானதல்ல என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் திட்டமிட்ட கொலைகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட ராமதாஸ், குறிப்பாக நெல்லை, ஈரோடு ஆகிய இடங்களில் நடைபெற்ற சம்பவங்களைக் சுட்டிக்காட்டி, எத்தகைய குற்றம் செய்தாலும் இந்த ஆட்சியில் தப்பிவிடலாம் என்ற மனநிலையே இதற்கு காரணம் என்றும், இந்நிலை தொடர்ந்தால் தமிழகம் கொலைகார நாடாக மாறிவிடும் என்றும், எனவே சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தற்காலிக ஊழியர்களின் பணிநிலையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அவர்களைப் பணிநிலைப்பு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, திமுக தேர்தல் அறிக்கையில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் பணிநிலைப்பு செய்யப்படுவார்கள் என்று அறிவித்தும் அதைச் செயல்படுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

நகைக்கடனுக்கான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியமைத்துள்ளது குறித்துப் பேசிய அவர், முன்பு வட்டியை மட்டும் புதுப்பித்துக் கொள்ளும் நிலை இருந்ததாகவும், தற்போது புதிய விதிமுறைப்படி நகையை மீட்ட அடுத்த நாளே மீண்டும் அடகு வைக்க முடியும் என்றும், இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்து, நகைக்கடன் தொடர்பான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

புதுச்சேரியில் கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது என்றும், சென்னையில் உள்ள கடைகளின் பெயர்ப்பலகைகளை ஒரு வாரத்தில் தமிழில் மாற்றாவிட்டால் கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்ற சென்னை மாநகராட்சியின் அறிவிப்பும் வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்த ராமதாஸ், தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் மொழிப்பற்று அதிகமாக உள்ளதாகவும், குறிப்பாக கர்நாடகாவில் மொழிப்பற்று அதிகமாக உள்ளது உண்மை என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து, திமுகவைப் போல பொது இடத்தில் உள்ள பாமக கொடி கம்பங்களை அகற்ற ஆணையிடுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பொது இடத்தில் கொடி கம்பங்கள் அமைக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் நீதிமன்றம் விதிக்கும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், சுவர்களில் அரசியல் விளம்பரங்கள் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், மற்ற மாநிலங்களில் இந்த நடைமுறை இல்லை என்றும், வெளிநாடுகளிலும் இதுபோன்ற நடைமுறை இல்லை என்றும், மாநாட்டு விளம்பரம் எழுதினால், மாநாடு முடிந்த பின் அக்கட்சியே அதனை அழிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளதாகவும், இதைத் தடை செய்ய வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button