திமுகவில் அடுத்த சர்ச்சை… நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய அமைச்சர் துரைமுருகன்

பெண்களை ஆபாசமாக பேசியதால், அமைச்சர் பொன்முடி வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், மாற்றுத்திறனாளிகள் தொடர்பான தனது பேச்சிற்கு அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உடல்நலக் குறைபாடு உள்ளவர்களை தாழ்வாக குறிக்கும் சொல்லைத் தவிர்த்து, கருணாநிதி கருணையோடு “மாற்றுத் திறனாளிகள்” என்று மதிப்புடன் அழைத்தார். நாங்களும் அதையே பின்பற்றி வருகிறோம். ஆனால், ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியபோது, பேச்சின் வேகத்தில் நான் தவறாக பழைய சொல்லைப் பயன்படுத்திவிட்டேன். இதை கழகத் தலைவர் தளபதி அவர்கள் எனக்கு நினைவூட்டியபோது, நான் மிகவும் வருந்தினேன்.

கலைஞரால் வளர்க்கப்பட்டவனாகிய நான் இத்தகைய தவறு செய்தது பெரிய பிழையாகும். மாற்றுத் திறனாளிகள் மனதில் காயம் ஏற்பட்டிருக்கலாம். எனவே, எனது மனப்பூர்வமான மன்னிப்பை தெரிவித்துக்கொள்கிறேன். தலைவர் தளபதி அவர்கள் எவ்வளவு வருத்தமடைந்திருப்பார் என்பது எனக்குப் புரிகிறது. அவருக்கும் என் மன்னிப்பு உரித்தாகட்டும். இனிமேல் இப்படியான தவறு நடக்காது என உறுதியளிக்கிறேன்.




