ஏடிஎம் கட்டண உயர்வு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ஏடிஎம்மில் பணம் எடுக்கும் கட்டண உயர்வால், நூறு நாள் வேலைத் திட்ட பயனாளிகள் மற்றும் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

அவர் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் டிஜிட்டல் இந்தியா அல்ல, நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல் எனக் குற்றம் சாட்டினார். வங்கியில் கணக்கு திறக்குமாறு பொதுமக்களை உற்சாகப்படுத்திய ஒன்றிய அரசு, பின்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்ததாகவும், அதன் மூலம் பணமில்லா பரிவர்த்தனைக்குத் தூண்டி, இப்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கூட கட்டணம் விதிக்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.
மே 1 முதல் உயர்த்தப்பட்ட கட்டணம்:
🔹 வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு இல்லாத வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், கட்டணம் ரூ.17 லிருந்து ரூ.19 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
🔹 இலவச பரிவர்த்தனை எண்ணிக்கையை கடந்தால் கூடுதலாக ரூ.2 வசூலிக்கப்படும்.
🔹 தங்கள் கணக்கு உள்ள வங்கி ஏடிஎம்மில் மாதம் 5 இலவச பரிவர்த்தனை செய்யலாம். அதற்கு மேல் எடுத்தால் கட்டணம் ரூ.21 லிருந்து ரூ.23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் ஏழை, நடுத்தர மக்களே அதிக பாதிப்புக்குள்ளாக நேரிடுவார்கள் எனத் தெரிவித்த முதல்வர், “ஏழைகள் ஏடிஎம் அட்டையை தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள்” என கடுமையாக விமர்சித்தார்.




