டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிரான, அமலாக்கத் துறை நடவடிக்கைளுக்கு தடை விதித்தது நீதிமன்றம் !

சென்னை உயர் நீதிமன்றம், டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனை தொடர்பாக மார்ச் 25-ம் தேதி வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கவும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. மதுபான கொள்முதல், பார் உரிமம் வழங்குதல், மதுபானக் கடைகளுக்கு மதுபானங்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து ஒப்பந்தம் உள்ளிட்டவற்றில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியிருந்தது. இந்த சோதனை அரசியல் சாசனத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்டதால் சட்டவிரோதமானது என்றும் அறிவிக்கக் கோரி தமிழக அரசின் உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குநரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது எனவும் அவர்கள் தங்கள் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வு, மாநில அரசின் அனுமதியைப் பெற்றே சோதனை நடத்த வேண்டும் என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டது. மேலும், அமலாக்கத் துறையின் சோதனைக்கான குறிப்பிட்ட காரணங்கள் மற்றும் சட்டப்பூர்வ அடிப்படைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டது. சோதனையின் போது பெண் அதிகாரிகள் உட்பட பலர் நீண்ட நேரம் சிறை வைக்கப்பட்டதாகவும், இது தனிநபர் சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் டாஸ்மாக் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதங்களையடுத்து, அமலாக்கத் துறை தனது நடவடிக்கைகள் குறித்து மார்ச் 25-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும், அதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.



