தமிழகம் வன்முறையாளர்களின் புகலிடமாக மாறி வருகிறது - ஓபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: வன்முறையில் முதல் மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகத்துக்கு திமுக அரசு தேடித் தரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.. என்று முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை. நாள்தோறும் பல கொலைகள் நடப்பதை பார்க்கும்போது, தமிழகம் வன்முறையாளர்களின் புகலிடமாக மாறி இருப்பதைக் காட்டுகிறது. இந்த நிலை நீடித்தால், வன்முறையில் முதன்மை மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகத்துக்கு திமுக அரசு தேடித் தரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தெரிகிறது.
தமிழகத்தை அமளிக்காடாக மாற்றியிருக்கும் திமுக அரசின் செயல்பாடுகள் கண்டனத்துக்கு உரியவை. தமிழகத்தையும், தமிழக மக்களையும் வன்முறையிலிருந்து காப்பாற்றவும், தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறக்கும் சமூக விரோதச் செயல்களுக்குத் தடை விதிக்கவும் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என கூறியுள்ளார்.




