Uncategorizedஅரசியல்தமிழகம்

திமுகவை வீழ்த்த பங்காளி சண்டையை ஓரங்கட்டுவோம் – டி.டி.வி தினகரன் ஓப்பன் டாக்

திமுக என்ற தீய சக்தியை அகற்றவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒன்று சேர்ந்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை ஏப் 25 2025

திமுக என்ற தீயசக்தியை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காகவே  திமுகவை எதிர்க்கின்ற கட்சிகள்அனைத்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்துள்ளதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

திமுகவை வீழ்த்துவதற்காக பழைய பங்காளி சண்டைகளை ஓரமாக வைத்துவிட்டு கூட்டணியில் ஒன்றாக செயல்படலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மயிலாடுதுறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி செயல்வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெற்றது

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், இந்தியாவின் பிரதமராக நரேந்திரமோடி வரவேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தோம். தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை வீழ்த்துவதற்காக திமுகவை எதிர்க்கின்ற அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிக்கிறோம். திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிற கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் .

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமினில் வெளிவந்து அமைச்சராக இருப்பதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல் பொன்முடி பெண்களைப் பற்றி இழிவாக பேசியதற்கு நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. அமைச்சர் துரைமுருகனை விடுதலை செய்தது தவறு என்று நீதிமன்றம் சொல்லியுள்ளது என அவர் கூறினார்.


திமுக ஆட்சியில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பயப்படுவதற்கான காலமாக உள்ளது. ஏனெனில், பட்டிதொட்டி எல்லாம் போதை கலாச்சாரம், போதை சாக்லேட், போதை மாத்திரைகள் விற்கப்படுகிறது. சட்டம்  ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சிறு பெண் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. கூலிப்படைகளின் ஆதிக்கத்தால் 5000-க்கும், பத்தாயிரத்திற்கு யாரை வேண்டுமானாலும் கொலை செய்கின்ற நிலை தமிழ்நாட்டில் உள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நான்கு ஆண்டுகள் முடியும் தருவாயிலும் நிறைவேற்றாமல்  மக்களை திமுக ஏமாற்றி வருகிறது. திமுக ஆட்சி முடிவுக்கு வந்தால்தான் மக்களுக்கு நிம்மதி வரும் என்றும் அவர் கூறினார்.

டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்று கூறிய அவர், 2026 மார்ச் மாதத்துக்கு பிறகு மக்களாட்சி அமைந்த பிறகு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கூறும் திருமாவளவன் விழுப்புரம்  கள்ளச்சாராய சம்பவத்தில்  66 பேர் பலியான போது பட்டியலின மக்களுக்காக போராடும் திருமாவளவன் முதலமைச்சரை  பதவி விலக வேண்டும் என்று சொல்லாதது ஏன்..? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பேட்டியின் போது அமமுக மாநில துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட செயலாளர் பொன்.பாரிவள்ளல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இக்கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button