அரசியல்தமிழகம்வணிகம்

அமலாக்கத்துறையின் சோதனை சட்டவிரோதமானது அல்ல…! டாஸ்மாக் மனு தள்ளுபடி..!

சென்னை ஏப் 22 2025

டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையை சட்ட விரோதம் என அறிவிக்க கோரி டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சோதனை அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடியாக அனுமதி அளித்துள்ளது. அமலாக்கத்துறை யின் சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

டாஸ்மாக்கில் நிர்ணயத்தை விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் கணக்கில் காட்டாமல் தனியார் மது உற்பத்தி நிறுவன உரிமையாளருடன் சேர்ந்து முறைகேடு நடப்பதாக புகார் கூறப்பட்டது.

இதனையடுத்து அந்த தகவலின் அடிப்படையில் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 6ஆம் தேதி முதல் சோதனை நடத்தினர். ஒரு சில இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், சென்னை, புதுக்கோட்டை, கோவை , ஆகிய பகுதிகளில் சோதனை 8ஆம் தேதி வரை நீடித்தது. சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், அம்பத்தூர் டாஸ்மாக், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சொந்தமான அக்காடு டிஸ்டிலர்ஸ் மதுபான நிறுவனம் அக்கார்டு ஹோட்டல், ஆயிரம் விளக்கு உள்ள எஸ்என்ஜெ டிஸ்டிலரீஸ், டி நகரில் உள்ள கால்ஸ் மதுபானம், சிவா டிஸ்டிலரீஸ், மயிலாப்பூர் ஆர் கே சாலையில் உள்ள எம்ஜிஎம் மதுபானம் நிறுவனம் ஆகிய இடங்களில்  சோதனை நடைபெற்ற நிலையில், சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்க துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்த வழக்கு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது டாஸ்மாக் சார்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் ஆகியோர் வாதிட்டனர். அமலாக்கத் துறை எப்போதும் வெளிப்படையாக இருந்ததில்லை எனவும் வெளிப்படையாக இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி அதன் பின்னால் அமலாக்கத்துறை ஒளிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்

ஆனால், டாஸ்மாக் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக முதல் தகவல் அறிக்கையில் உள்ளதாகவும், சிலர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடத்தியதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த வழக்கில் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது. டாஸ்மாக் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ்சிங் கடந்த 21ஆம் தேதி பதில் வாதம் செய்தார்.. அமலாக்கத் துறைக்கு சோதனை நடத்த அதிகார வரம்பு இல்லை என்றும் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை எவ்வாறு சொல்ல முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களை முடிவடைந்ததையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது அல்ல என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் சோதனை அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தவும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அமலாக்கத்துறை யின் சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button