பத்திரமாக தரையிறங்கினார் சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் உள்ளிட்டோர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்பினர். புதன்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு (இந்திய நேரப்படி) புளோரிடா கடலில் டிராகன் விண்கலம் வெற்றிகரமாக நீரில் தரையிறங்கியது. சுனிதா, வில்மோர் மற்றும் அமெரிக்கா, ரஷ்யாவைச் சேர்ந்த இரு விண்வெளி வீரர்களுடன் டிராகன் விண்கலம் பூமி திரும்பியது உலக மக்களின் பிரார்த்தனைகளுக்கு பலனளிக்கும் வகையில் அமைந்தது. நீரில் தரையிறங்கும் காட்சிகளை நாசா மற்றும் ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனங்கள் நேரலையில் ஒளிபரப்புச் செய்தன.

அமெரிக்காவின் போயிங் நிறுவனம் நாசாவுடன் இணைந்து போயிங் ஸ்டார்லைனர் என்ற புதிய விண்கலத்தை உருவாக்கியது. இந்த விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் கடந்த ஜூன் 5 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணித்தனர். பத்து நாட்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுவிட்டு பூமிக்குத் திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்களால் பூமிக்குத் திரும்ப முடியவில்லை. கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் ஆட்கள் இன்றி பூமிக்குத் திரும்பியது.
சுமார் 9 மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோருக்குப் பதிலாக புதிய வீரர்களை அனுப்புவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.




