தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

மக்களவைத் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தின. திமுக எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, தயாநிதி மாறன், கனிமொழி என்விஎன் சோமு, பி. வில்சன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்பி தொல் திருமாவளவன், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். “தென் மாநிலங்களை வஞ்சிக்காதே”, “மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைக் குறைக்காதே” என்று கோஷங்களை எழுப்பினர்.

இது தொடர்பாக, மக்களவையில் விதி எண் 377-ன் கீழ் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பேசினார். “நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை நடவடிக்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும். மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக தென் மாநிலங்கள் தண்டிக்கப்படுகின்றன.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிய மாநிலங்களுக்குத்தான் அதிகாரம் அதிகரிக்கும். தமிழகம் போன்ற மாநிலங்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படும். தென்னிந்தியா வலுவிழக்கும். எனவே, தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும். தென் மாநிலங்கள் இரண்டாந்தரமாக தள்ளப்படாது என உறுதியளிக்க வேண்டும்” என்று ஜோதிமணி வலியுறுத்தினார்.




