திரையுலகத்தை உலுக்கிய மரணம் – மனோஜ் பாரதிராஜாவுக்கு விஜய் உட்பட பிரபலங்களின் இறுதி அஞ்சலி

இன்று மறைந்த நடிகர் மற்றும் இயக்குநர் மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை சேத்துபட்டில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து நடந்தே வந்து மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் சூர்யா, இயக்குநர் மணிரத்னம் மற்றும் அவரது மனைவி சுஹாசினி, நடிகர் நாசர், இயக்குநர் பி. வாசு, நடிகர் வித்தார்த், நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, நடிகை ராதிகா மற்றும் அவரது கணவர் சரத்குமார், நகைச்சுவை நடிகர் செந்தில், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் ஸ்டாலின் ஆகியோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மனோஜ் பாரதிராஜா மார்ச் 25, 2025 அன்று 48 வயதில் மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகத்தையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மனோஜ் தனது தந்தை பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ (1999) திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமானார். அதன்பிறகு ‘கடல் பூக்கள்’, ‘சமுத்திரம்’, ‘அல்லி அர்ஜுனா’, ‘விருமன்’, ‘பல்லவன்’, ‘ஈர நிலம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அவரது திடீர் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை குஷ்பூ சுந்தர் தனது ‘எக்ஸ்’ (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில், “மனோஜ் இனி இல்லை என்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரது திடீர் மறைவு வேதனை அளிக்கிறது. அவரின் குடும்பத்தினருக்கு கடவுள் சக்தி அளிக்கட்டும்,” என்று பதிவிட்டார்.
மனோஜ் பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு தொடர்பான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தும் நேரலை காணொளி கீழே வழங்கப்பட்டுள்ளது:




