லைஃப் ஸ்டைல்

சண்டே ஸ்பெஷல் - கோல்கொண்டா சிக்கன் செய்யலாம் வரீங்களா ?

அசைவ உணவு பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே கொண்டாட்டம்தான். சுவையான சிக்கனை சமைப்பதும் ரொம்பவே சுலபம். அப்படி சுலபமாகவும், அதே சமயம் அட்டகாசமான சுவையுடனும் தயாரிக்கக்கூடிய ஒரு உணவுதான் கோல்கொண்டா சிக்கன்.

டெக்கான் பகுதியை பூர்வீகமாக கொண்ட இந்த ரெசிபி, காரமான ஸ்டார்ட்டர்களை விரும்புபவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது. எலும்பில்லாத சிக்கன் துண்டுகளை மசாலா பொருட்களுடன் நன்கு ஊற வைத்து, பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், தயிர், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி தயார் செய்யப்படும் இந்த கோல்கொண்டா சிக்கன், சாம்பார் சாதம், பிரியாணி போன்றவற்றுக்கு தொட்டுக் கொள்ள அருமையான ஒரு காம்பினேஷன். சரி வாங்க, இந்த அட்டகாசமான கோல்கொண்டா சிக்கனை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் – அரை கிலோ

சோள மாவு – 50 கிராம்

பச்சை மிளகாய் – 10

இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்

3 கொத்து கறிவேப்பிலை

தயிர் – 100 கிராம்

மல்லித்தூள் – 1/2 ஸ்பூன்

வெங்காயம் – 100 கிராம்

மிளகுத்தூள் – 1 ஸ்பூன்

முட்டை – 1

எலுமிச்சைச்சாறு – 2 ஸ்பூன்

மைதா – 2 ஸ்பூன்

நறுக்கிய பூண்டு – 2 ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

பொரிக்க எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு கழுவி, தண்ணீர் இல்லாமல் வைத்துக் கொள்ளவும். சிக்கனில் இருந்து தண்ணீர் வடிந்ததும், அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்க்கவும். பின்னர் சோள மாவு, மைதா மாவு, உப்பு, மிளகுத்தூள் மற்றும் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை குளிர்சாதனப் பெட்டியில் அரை மணி நேரம் வைக்கவும். பின்னர் முட்டை மற்றும் தண்ணீரை சிக்கனுடன் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் இந்த கலவையை மீண்டும் அரை மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

ஒரு வாணலியில் பொரிக்க தேவையான எண்ணெயை ஊற்றி, எண்ணெய் சூடானதும், மேரினேட் செய்து வைத்துள்ள சிக்கனை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பின்னர் மீண்டும் ஒரு வாணலியில் சமையல் எண்ணெயை சேர்த்து, நறுக்கிய பூண்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்னர் இதில் தயிர் சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின்னர் வறுத்த சிக்கன், மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். – சிக்கன் மசாலாவை நன்கு உறிஞ்சும் வரை வதக்கி விட்டு, அதன்பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும். 2 நிமிடங்கள் கழித்து வறுத்த கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால், சூப்பரான கோல்கொண்டா சிக்கன் ரெடி!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button