Uncategorized

தொகுதி மறுவரையறை விவகாரம்: எம்பிக்களுடன் பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் பேசினார். அவர் தெரிவித்ததாவது:

மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களை தண்டிக்க முடியாது என்பதில் தமிழக சட்டப்பேரவை உறுதியாக உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய மாநிலம் தமிழ்நாடுதான்.

வட மாநிலங்களில் எந்த அளவில் தொகுதி மறுவரையறை நடைமுறைக்கு வருகிறதோ, அதே அளவில் தமிழ்நாட்டிலும் அமல்படுத்த வேண்டும். மக்கள் தொகை கட்டுப்பாட்டில் முன்னோடியாக செயல்பட்ட மாநிலங்கள் அபராதம் செலுத்தும் நிலையில் இருக்கக்கூடாது.

தமிழ்நாட்டின் நீண்ட கால உரிமைகளை நிலைநாட்ட, தேசிய அளவில் விழிப்புணர்வை உருவாக்க, கடந்த வாரம் நடைபெற்ற கூட்டுக் குழுக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இதற்கு ஆதரவு அளித்த அனைத்து கட்சிகளுக்கும், பங்கேற்ற தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

தற்போதுள்ள தொகுதி வரையறை 2026-ஆம் ஆண்டிலிருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும். இதற்காக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உறுதியளிக்க வேண்டும், அரசியலமைப்பில் தேவையான திருத்தங்களை கொண்டுவர வேண்டும்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட தலைவர்கள் நேரிலும், ஓடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் காணொளி மூலம் கலந்துகொண்டு, தொகுதி மறுவரையறைக்கு எதிரான முதல் கூட்டுக்குழுக் கூட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கூட்டத்தில் பின்வரும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன:

  1. தொகுதி மறுவரையறை மாநிலங்களின் ஆலோசனையுடன் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்.
  2. 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி வரையறை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்.
  3. மக்கள் நலத்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்களை தண்டிக்கக் கூடாது.
  4. தேவையான சட்ட திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.
  5. கூட்டத்தில் பங்கேற்ற மாநிலங்களும் தங்கள் சட்டசபைகளில் இதற்கான தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.

தமிழ்நாடு தனது உரிமைக்காக தொடர்ந்து போராடும், வெற்றி பெறும். இதற்காக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பிக்களை அழைத்து, பிரதமர் மோடியை நேரில் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button