ஐபிஎல்-ஐ புறக்கணியுங்கள் - பாக். வீரர் இன்சமாம் ஆவேசம் !

லாகூர்: ஐபிஎல் கிரிக்கெட்டை அனைத்து வெளிநாட்டு வீரர்களும் புறக்கணிக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் கூறியுள்ளார்.
ஐபிஎல் 18-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடர் உலக அளவில் நடைபெறும் விளையாட்டு தொடர்களில் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் புழங்கும் இந்த தொடர் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு முதுகெலும்பாய் அமைந்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்சமாம் -உல்-ஹக் அது குறித்து பேசியுள்ளார்.“உலக கிரிக்கெட்டின் சிறந்த வீரர்கள் அனைவரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடுகின்றனர். ஆனால், மற்ற நாடுகளில் நடைபெறும் லீக் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்பது இல்லை. அதனால் அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் நாட்டு வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்பதை தடுக்க வேண்டும். மற்ற நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் லீக்கில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு அனுமதி இல்லாத போது அதையே தான் மற்ற நாட்டு வாரியங்களும் செய்ய வேண்டும்.” என அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் நடைபெறும் அதே காலகட்டத்தில் பாகிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




