தமிழ் வளர்ச்சிக்கு அறிவிப்புகள் மட்டும் போதாது, செயல்பாடுகள் வேண்டும்- ராமதாஸ் அறிக்கை

சென்னை: தமிழ் வளர்ச்சிக்கு, பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழை பயிற்று மொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் வளர்ச்சிக்கு வெறும் அறிவிப்புகள் போதாது, செயல்பாடுகள் வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 1999 ஆம் ஆண்டு, தமிழை எட்டாம் வகுப்பு வரை பயிற்று மொழியாக்க கோரி 102 தமிழறிஞர்கள் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, தமிழை பயிற்று மொழியாக்க சட்டம் இயற்றப்படவில்லை. மாறாக, 5 ஆம் வகுப்பு வரை மட்டும் தமிழ் பயிற்று மொழி என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணை 5 மாதங்களில் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடு 25 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. 2006 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை அறிமுகப்படுத்தியது திமுக அரசு. தமிழுக்கு துரோகம் இழைத்த அந்த செயல் இன்றும் தொடர்கிறது எனவும் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மொழி விஷயத்தில் உணர்ச்சிகளை தூண்டுவதை விட, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடித்து, தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும். பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழியாக்க சட்டப்பேரவையில் சட்டம் இயற்ற வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.




