
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிர்ணயித்ததை, கேரள கவர்னர் ராஜேந்திரன் அர்லேகர் எல்லையை தாண்டிய செயல் என்று கண்டித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கவர்னர் கிடப்பில் வைத்திருந்த பல்கலைக்கழக வேந்தர் மற்றும் துணைவேந்தர் உள்ளிட்ட 10 மசோதாக்களுக்கு சமீபத்தில் உச்சநீதிமன்ற சிறப்பு பெஞ்ச் ஒப்புதல் அளித்தது. இந்த தீர்ப்பு, மாநில ஆளுநர்களின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், இந்த வழக்கில் குடியரசு தலைவருக்கும் காலக்கெடு விதிக்கப்பட்டது முக்கிய விவாதப் பொருளாக மாறியது.
இந்த உத்தரவு தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர் கடுமையாக சாடியுள்ளார்

மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அரசியல் சாசனத்தில் காலவரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான காலவரம்பை நிர்ணயிக்க அரசியல் சாசனம் திருத்தம் செய்ய வேண்டும். இதற்கு நாடாளுமன்றத்தில் 3-ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
சுப்ரீம் கோர்ட்டின் 2 நீதிபதிகள் இணைந்து மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான காலவரம்பை நிர்ணயம் செய்துள்ளனர். இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

இது வரம்பு மீறிய செயல் ஆகும். இது தொடர்பாக நீதிபதிகள் மத்திய அரசுக்கு தங்கள் பரிந்துரையை வழங்கி இருக்கலாம்.அல்லது
கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றி இருக்கலாம். எல்லா முடிவுகளையும் கோர்ட்டுகளே எடுக்கும் என்றால் நாடாளுமன்றம் எதற்கு? சட்டசபைகள் எதற்கு..? என கேள்வி எழுப்பியுள்ளார்.




