டாஸ்மாக் வருமானமும், கடனும் உயர்ந்துள்ளது- பட்ஜெட் குறித்து அண்ணாமலை ட்வீட்

சென்னை: 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, இன்று காலை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள நிலையில், அதனை கிண்டலாக்கியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் தளத்தில் பல்வேறு பதிவுகளை பகிர்ந்துள்ளார்.

ஒரு பதிவில், “இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்து சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது, விளம்பர அறிவிப்புகளுக்கு ஒதுக்கீடுகள் இல்லாமல் உயர்ந்துள்ளது. திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க.. சென்னைக்கு மிக அருகே.. 2 ஆயிரம் ஏக்கரில் பிரம்மாண்ட நகரம்- தமிழக பட்ஜெட் அறிவிப்புகள்
மற்றுமொரு பதிவில், தமிழக பட்ஜெட்டை நேரலையில் மக்கள் காணும்படி ஏற்பாடு செய்யப்பட்ட திரையின் முன்னால் காலியாக கிடந்த இருக்கைகளின் படத்தை பகிர்ந்து, “பல ஆயிரம் கோடி ஊழல் மட்டுமே செய்து, தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், விளம்பரத்துக்காக வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் திமுக வெளியிடும் பட்ஜெட்டும், இதுபோன்று காலியாக இருப்பதில் வியப்பில்லை” என்று கிண்டலாய் குறிப்பிட்டுள்ளார்.




