குழந்தைகள் மீது திமுக மொழிப்போரை திணிக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில்: “குழந்தைகள் கல்வியில் திமுக அரசு விளையாடுகிறது. மிகப் பெரிய போரை தமிழ் குழந்தைகள் மீது திணிக்க தொடங்கியுள்ளது.” என்று தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் அவர் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தி.மு.க.வினர் 1967-க்கு பிறகு 2026 தேர்தலை பயன்படுத்தி குறுகிய நோக்கத்துடன் மொழி பிரச்சினையை மீண்டும் உருவாக்கி உள்ளனர். தாய் மொழியில் கல்வி படிக்க வேண்டும் அத்துடன் ஆங்கிலம் படிக்க வேண்டும். மூன்றாவதாக விரும்பிய மொழியை குழந்தைகள் படிக்க வேண்டும். பெருந்தலைவர் காமராஜர் பள்ளிக்கூடங்களை திறந்தார். இலவச கல்வியைத் தந்தார். ஆனால், அதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.
தற்பொழுது அரசு பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஆசிரியர்கள் உள்ளனர். தற்பொழுது அரசு பள்ளியின் தரம் எப்படி உள்ளது என்று பார்க்க வேண்டும். அரசு பள்ளிகள் மூடப்பட்டு தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் குழந்தைகளை அப்பா என்று கூறுமாறு கூறியது சந்தோஷமான ஒன்றுதான். அவர் தந்தை ஸ்தானத்திலிருந்து சிந்தித்து செயல்பட வேண்டும்.
மத்திய அமைச்சரவையில் திமுக இடம்பெறும்போது எங்கள் எம்பிக்களுக்கு இந்தி தெரியும் என்று கலைஞர் கூறினார். திமுக தலைவர்களின் குழந்தைகளுக்கு ஒரு நியாயம், தொண்டர்களின் குழந்தைகளுக்கு ஒரு நியாயமா? திமுக மிகப் பெரிய போரை தமிழ் குழந்தைகள் மீது திணிக்க தொடங்கியுள்ளது. தமிழை திமுக அழித்து வருகிறது. தமிழர் என்ற உணர்வு இல்லாமல் ஆங்கிலம் பேசும்நிலை தான் தற்பொழுது உள்ளது குழந்தைகள் கல்வியில் திமுக அரசு விளையாடக் கூடாது.
இதையும் படிங்க.. இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி: இஸ்லாமிய தோரணையில் கெத்து காட்டிய விஜய் !
தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்துக்கு வந்தவர்கள் எல்லாம் வாழ்த்த வந்தவராக மட்டும் கருதக் கூடாது. வீழ்த்துவதற்காகவும் வந்திருக்கலாம்” என்றார். இந்தப் பேட்டியின்போது குமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார், முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி மற்றும் பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.




