தர்மேந்திர பிரதான் சர்ச்சை பேச்சு: திருப்பூர் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு எம்பிக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் வடக்கு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கியது. மக்களவை கூடிய சிறிது நேரத்தில், தென் சென்னை திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். அப்போது, “பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்பதாக தமிழக அரசு ஒப்புக்கொண்டு பிறகு யு டர்ன் அடித்துவிட்டது. தமிழக அரசை பொறுத்தவரை, அவர்கள் தமிழக மாணவர்கள் விஷயத்தில் பொறுப்பாக இல்லை; நேர்மையாக இல்லை; ஜனநாயக முறைப்படி செயல்படவில்லை; அவர்கள் நல்ல நாகரிகத்தில் இல்லை. அவர்கள் உறுதிமொழி கொடுத்திருக்கிறார்கள். தற்போது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்படி செயல்படுகிறார்கள். மொழியை வைத்துக்கொண்டு அவர்கள் விளையாடுகிறார்கள். அவர்கள் மாணவர்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள்.” என கடுமையாக குற்றம் சாட்டி இருந்தார்.
அமைச்சரின் இந்த பேச்சுக்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்துக்குப் பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியது. அப்போது. அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பி கனிமொழி பேசினார். அவர் தனது உரையில், “இன்று நான் வலியோடு இருக்கிறேன். அமைச்சரின் பதில் வலியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசு, தமிழக எம்பிக்கள், தமிழக மக்கள் நாகரிகமற்றவர்கள் என அமைச்சர் கூறி இருக்கிறார்.”
இதையும் படிங்க.. தென்மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை
கனிமொழியின் பேச்சை தொடர்ந்து தனது கருத்துக்களை உடனே அமைச்சர் தர்மேந்திர பிரதான் திரும்ப பெற்றுக் கொண்டார். இருந்தாலும் அவரின் கருத்துக்கள் தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினரை கொந்தளிக்க செய்து வருகிறது. குறிப்பாக திருப்பூரில் மத்திய அமைச்சரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட மற்றும் வடக்கு மாநகர திமுக சார்பில்.. புதிய பேருந்து நிலையத்தில் வைத்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.




