எறும்பு கடித்தாலும் 'பெயின் கில்லர்' எடுத்துக்கொள்ளும் நபரா நீங்கள் ? இந்த பதிவு உங்களுக்குத்தான் !

இப்போதெல்லாம் பலர் தங்கள் உடலின் எந்த பகுதியில் வலி ஏற்பட்டாலும், உடனே ஒரு பெயின் கில்லர் எனும் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி போட்டுக் கொள்கின்றனர். இதனால் வரும் பக்க விளைவுகளை பற்றி அவர்கள் யோசிப்பதில்லை. தற்காலிக நிவாரணம் மட்டுமே அவர்களுக்கு பெரிதாய் தோன்றுகிறது.

ஏற்கனவே சிறுநீரக பிரச்சனைகளை கொண்டிருப்பவர்கள் இந்த வலி நிவாரணிகளை எடுக்கும் போது, சிறுநீரக பாதிப்பு இன்னும் மோசமடைவதற்கான வாய்ப்புள்ளது. எனவே உடலில் எந்த வலியை சந்தித்தாலும், அதற்கு சுயமாக மருந்து எடுத்துக் கொள்வது என்பது நல்லதல்ல. இல்லாவிட்டால், அதன் விளைவாக மோசமான சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. ஆகவே அடிக்கடி உடலில் ஏதேனும் வலியை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி, அதற்கான காரணத்தை கண்டறிந்து, சரியான முறையில் சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். நாம் எடுக்கும் பெரும்பாலான வலி நிவாரணி மாத்திரைகளிலும் இப்யூபுரூஃபன், டைக்ளோஃபெனாக், அசெக்ளோஃபெனாக் போன்ற NSAIDகள் (ஸ்டீராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள்) உள்ளன. இவை சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளன. எனவே எந்த ஒரு வலி நிவாரண மாத்திரைகளை எடுப்பதாக இருந்தாலும், மருத்துவரின் அனுமதியுடன் மட்டுமே எடுக்க வேண்டும்.

வலி நிவாரணி மாத்திரைகளால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பிற்கு ஆரம்ப கட்டத்தில் எந்த ஒரு அறிகுறியும் தெரியாது. அதை இரத்தம் மற்றும் சிறுநீரக பரிசோதனைகளின் மூலம் மட்டுமே கண்டறிய முடியும். எனவே நீங்கள் இதுவரை மருத்துவரிடம் கேட்காமல் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்து வந்தால், உடனே அதை நிறுத்திவிட்டு, மருத்துவரை அணுகி, அவர் அளிக்கும் மருந்துகளை எடுங்கள்.
வலி நிவாரணி மாத்திரைகளால் சிறுநீரக பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான சில வழிகள்:
- எந்த ஒரு வலிக்கும் வலி நிவாரணி மாத்திரைகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- எத்தனை வலி நிவாரணி மாத்திரைகளை எடுக்கிறீர்கள் என்பதை நினைவில் கொண்டு, அதைப் பற்றி மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
- இந்த வகை மருந்துகளால் நீரிழப்பு ஏற்படாமல் இருக்க, நிறைய நீரைக் குடிக்க வேண்டும்.
- முக்கியமாக எந்த ஒரு வலி நிவாரணி மாத்திரைகளையும் மருத்துவரின் அறிவுறுத்தல்களின் பேரில் மட்டுமே எடுக்க வேண்டும். எனவே நீங்கள் அடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளை எடுப்பவராயின், அவ்வப்போது சிறுநீரக செயல்பாடுகளை பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியம்.




