முக வீக்கம் சிறுநீரக பிரச்சினைக்கு அறிகுறியா.. என்னங்க சொல்றீங்க ?

ஒருவரது சிறுநீரகங்களில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும், அதன் தாக்கம் ஒட்டுமொத்த உடலிலும் காணப்படும். ஒருவரது சிறுநீரகங்கள் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபணுக்கள் ஆகியவற்றினால் பாதிக்கப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தால், சிறுநீரகங்களால் இரத்தத்தை சரியாக வடிகட்ட முடியாது. அதுவும் ஏற்கனவே சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனை இருந்தால், சிறுநீரக நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. சிறுநீரகங்களில் பிரச்சனை அல்லது நோய் இருந்தால், ஆரம்பத்தில் ஒருசில அறிகுறிகள் தெரியும். அதுவும் காலை வேளையில் ஒருசில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகளை கவனித்து உடனே சிகிச்சை மேற்கொண்டால், ஆரம்பத்திலேயே சிறுநீரக பிரச்சனையை சரிசெய்யலாம்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு உலக சிறுநீரக தினம் மார்ச் 13 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆங்காங்கு நடத்தப்படும். இன்று உலக சிறுநீரக தினம் என்பதால் சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தால் காலையில் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
- முக வீக்கம் காலையில் எழுந்ததும் முகத்தில் வீக்கம் இருந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் முக வீக்கம் சிறுநீரக நோயின் அறிகுறியாகும். அதுவும் இந்த வீக்கம் கணுக்கால், பாதங்கள் போன்றவற்றில் காணப்பட்டால், சிறுநீரகங்களில் தீவிர பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது.
- நுரையுடன் கூடிய சிறுநீர் காலையில் எழுந்ததும் சிறுநீர் கழிக்கும் போது, அந்த சிறுநீர் நுரையுடன் வெளியேறினால், அது சிறுநீரக பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். எப்போது சிறுநீரகங்களால் சரியாக வேலை செய்ய முடியாமல் போய், சிறுநீரில் புரோட்டீன் அதிகமாகிறதோ, அப்போது தான் இப்படி நுரையுடன் கூடிய சிறுநீர் வெளியேறும்.
- வறண்ட சருமம் மற்றும் அரிப்பு சிறுநீரகங்கள் சேதமடைந்திருந்தால், உடலில் நச்சுக்கள் மற்றும் கழிவுகள் குவிந்து, வியர்வை சுரப்பிகளை சுருக்கி விடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி வியர்வை சுரப்பிகள் சுருங்கும் போது, அது சருமத்தில் வறட்சியை அதிகரித்து, அரிப்பையும் ஏற்படுத்தும். எனவே சருமத்தில் திடீரென்று மிகுந்த வறட்சியையும், அரிப்பையும் சந்தித்து, அதற்கு என்ன தான் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தினாலும், வறட்சி நீங்காமல் இருந்தால், சிறுநீரக பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது.
- மிகுந்த உடல் சோர்வு சிறுநீரகங்கள் வழக்கம் போல செயல்படாமல், அதன் செயல்பாடு குறைந்தால், இரத்தத்தில் நச்சுக்கள் அதிகம் சேர்ந்திருக்க வாய்ப்புள்ளது. இப்படி நச்சுக்கள் இரத்தத்தில் அதிகம் தேங்கினால், அது உடல் சோர்வை அதிகரித்து, எதிலும் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்பட வைக்கும். ஆகவே இப்படியான அறிகுறியை சந்தித்தால், அதை லேசாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.
- வாய் துர்நாற்றம் வழக்கத்திற்கு மாறாக வாய் துர்நாற்றம் அதிகமாக இருந்தால், அது சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம். அதுவும் வாய் துர்நாற்றத்தில் அம்மோனியா நாற்றத்தை உணர்ந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
சிறுநீரகங்களில் எவ்வித பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டுமானால், பின்வரும் பழக்கங்களை ஒருவர் கொண்டிருக்க வேண்டும். அவையாவன: * பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும். * தினமும் 1 மணிநேரமாவது உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். * உடல் எடையை ஆரோக்கியமான அளவில் பராமரிக்க வேண்டும். * தினமும் போதுமான அளவு தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். * புகைப்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். * மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். * மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். * நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.




