தமிழகம்

குடும்பக் கட்டுப்பாட்டை பின்பற்றினால், தொகுதியை குறைக்கிறார்கள்- துரைமுருகன் கிண்டல்

வேலூர்: “குடும்ப கட்டுப்பாட்டை தமிழ்நாடு சிறப்பாக பின்பற்றி, மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. தற்போது மத்திய அரசு மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையை குறைப்பதாக கூறுகிறார்கள்.”.. என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர தி.மு.க. சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் புதிய பஸ்நிலையம் பகுதியில் கடந்த மார்ச் 12ம் தேதி இரவு நடந்தது. இந்த கூட்டம் குடியாத்தம் நகர செயலாளரும், நகரமன்ற தலைவருமான எஸ்.சவுந்தரராஜன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட துணைசெயலாளர் ஜி.எஸ்.அரசு, மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் குடந்தைபாஸ்கர், மாவட்ட அவை தலைவர் முகமதுசகி, எம்.எல்.ஏ.க்கள் ப.கார்த்திகேயன், அமலுவிஜயன் ஆகியோரும் பங்கேற்றார்கள்.

இந்த கூட்டத்தில் அமைச்சரும், தி.மு.க. பொதுச்செயலாளருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசுகையில், “இந்த கூட்டம் இந்தி திணிப்பு, நாடாளுமன்ற தொகுதிகள் குறைப்பு, நிதி ஒதுக்கீடு குறைப்பு என்ற மும்முனை தாக்குதலுக்கு எதிராக நடக்கும் கூட்டம். நம் மீது இந்தியை திணிக்கக்கூடாது என பெரியார், அண்ணா உள்ளிட்ட பெரும் தலைவர்கள் போராடினார்கள். அதனால் அப்போது இந்தி திணிப்பு கைவிடப்பட்டது. மீண்டும் 1965-ம் ஆண்டு இந்தி திணிப்பு நடந்தது. அப்போது வேலூர் அருகே பேரணாம்பட்டில் துப்பாக்கி சூடு நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 12 வயது சிறுமி பலியானாள்.

இப்படியாக தமிழகம் முழுவதும் நடந்த போராட்டத்தால் அப்போது இந்தி திணிப்பு வாபஸ் பெறப்பட்டது. அப்போது அண்ணா, கலைஞர் கருணாநிதி இருந்தனர். இப்போது மூன்றாவது முறையாக இந்தியை திணிக்க முயற்சிக்கிறார்கள். இப்போது யாரும் இல்லை என நினைத்தார்கள். ஆனால் அண்ணா, கலைஞர் என அனைவரையும் ஒருங்கே பெற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். இந்தி திணிப்பு எல்லாம் இங்கு எடுபடாது.

குடும்ப கட்டுப்பாட்டை தமிழ்நாடு சிறப்பாக பின்பற்றி, மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. தற்போது மத்திய அரசு மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையை குறைப்பதாக கூறுகிறார்கள். மத்திய அரசு தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்வது கிடையாது. பேரிடர் நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. இருக்கிற நிதியை வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். தமிழ்நாட்டு மக்களை காட்டுமிராண்டிகள் என மத்திய அமைச்சர் கூறியுள்ளார். அவருக்கு நாவடக்கம் தேவையாகும்.

தமிழ்நாட்டை பற்றி மத்திய அரசுக்கு நன்கு தெரியும். தமிழக அரசு மீது கை வைத்தால் குளவி கூட்டில் கை வைத்தது போல் ஆகிவிடும். தி.மு.க. ஆட்சியை கலைத்து விடலாம் என நினைக்கிறார்கள். அது நடக்காது. அதற்கு சட்டத்திலும் இடம் கிடையாது” இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button