தமிழகம்

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி !

சென்னை: தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்திருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடந்த ஜனவரி மாதம் பேரவைச் செயலரிடம் வழங்கியிருந்தார். ‘சட்டப்பேரவையில் அதிமுகவினர் பேசுவதற்குத் தலைவர் அப்பாவு போதுமான நேரம் ஒதுக்குவதில்லை. அவர்கள் பேசுவதை ஒளிபரப்புவதும் இல்லை. ஆளுங்கட்சியுடன் சேர்ந்து செயல்படும் அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்’ என்று அவர் தீர்மானத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த 14, 15-ம் தேதிகளில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 17-ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் அப்பாவு தெரிவித்தார்.

அதன்படி, பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக 154 பேரும், ஆதரவாக 63 பேரும் வாக்களித்தனர்.

தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்த உடனே, பேரவைத் தலைவர் இருக்கையில் இருந்து அப்பாவு எழுந்து சென்றார். வாக்கெடுப்பின் முடிவில் தீர்மானம் தோல்வியடைந்ததால், பேரவைத் தலைவர் அப்பாவு மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்து அடுத்தடுத்த அலுவல் நடவடிக்கைகளைத் தொடங்கினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button