உலகம்

காற்றில் பறந்த 'காசா' போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் தாக்குதலில் 100 பேர் பலி !

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த ஜனவரி 19-ம் தேதி இஸ்ரேல் – காசா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், “பிணைக் கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது. அமெரிக்க அதிபரின் தூதர் மற்றும் இதர மத்தியஸ்தர்களின் அறிவுரைகளையும் ஹமாஸ் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதனால் காசா மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளோம். இனி ஹமாஸுக்கு எதிரான எங்கள் ராணுவ நடவடிக்கை படிப்படியாக தீவிரப்படுத்தப்படும்” என்று அறிவித்துள்ளது.

இதையடுத்து, மத்திய காசாவில் டேர்-அல்-பாலா பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் மூன்று குடியிருப்புகள் தரைமட்டமாயின. கான் யூனிஸ், ராஃபாவிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல்களில் குழந்தைகள், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இஸ்ரேல் – காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மூன்று கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதன்படி, இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலத்தீன கைதிகள் விடுதலைக்கு ஈடாக, ஒவ்வொரு கட்டமாக ஹமாஸ் தன் வசமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும். விடுவிக்கப்படும் ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதிக்கும் 30 பாலத்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பது நிபந்தனை.

இந்நிலையில், “ஹமாஸ் இப்போதே அனைத்துப் பணயக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்; கொல்லப்பட்டவர்களின் உடல்களை ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில், ஹமாஸின் ஒருவர்கூட உயிருடன் இருக்க முடியாது. இதுவே இறுதி எச்சரிக்கை” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

“2023 அக்டோபர் 7-ம் தேதி தாக்குதலில் பிடிபட்ட பணயக் கைதிகள் அனைவரையும் உடனே விடுவிக்காவிட்டால், மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் எச்சரித்திருந்தார்.

இந்த எச்சரிக்கைகளுக்குப் பிறகும், பணயக் கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் எந்த முன்னேற்றமும் காட்டாததால் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button