சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் சிக்கல் !

சுனிதா வில்லியம்சை பூமிக்கு அழைத்து வர இருந்த திட்டம் கைவிடப்பட்டது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் ஏவப்படுவது ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் பணிபுரிகிறார். விண்ணில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏற்கனவே 2 முறை சென்று வந்த சுனிதா வில்லியம்ஸ், கடந்த ஜூன் 5ஆம் தேதி, ஸ்டார்லைனர் விண்கலன் மூலம் மீண்டும் விண்வெளி நிலையத்திற்கு சென்றார்.

சுனிதாவுடன் விண்வெளி வீரர் வில்மோரும் விண்வெளி நிலையம் சென்று 9 நாட்கள் தங்கி ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்புவதாகத்தான் முதலில் திட்டமிட்டு இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக, விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக சுனிதா வில்லியம், வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்திலேயே தங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை மீண்டும் பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை விண்வெளியில் ஏவப்பட்டு இருந்தது. அந்த ராக்கெட்டில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நான்கு விண்வெளி வீரர்களைக் கொண்ட மாற்றுக் குழுவினரையும் ஏவ திட்டமிட்டிருந்தனர். அதில் அமெரிக்காவைச் சேர்ந்த இரு வீரர்களும், ஜப்பான் மற்றும் ரஷ்யா நாடுகளைச் சேர்ந்த தலை ஒரு வீரரும் இருந்தனர்.
தற்பொழுது கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் ஏவப்படுவது ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்து இந்த ராக்கெட் எப்போது ஏவப்படும் என்பது குறித்த அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. இதனால் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது மேலும் தாமதம் ஆகியுள்ளது.




