உலகம்

பூமிக்கு திரும்ப தயாரானார் சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இன்று சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்புகிறார்.

அமெரிக்காவின் போயிங் நிறுவனம் ஸ்டார்லைனர் என்ற புதிய விண்கலத்தைத் தயாரித்தது. இந்த விண்கலத்தில் பயணித்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தனர்.

10 நாட்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுவிட்டு பூமிக்குத் திரும்பத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் அவர்களால் பூமிக்குத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் ஆட்கள் இன்றி பூமிக்குத் திரும்பியது.

இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் இரு வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. இந்த விண்கலம் மூலம் சுனிதா மற்றும் பேரி வில்மோரை பூமிக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்புகிறார். பூமி திரும்புவதற்காக டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ஜ் வில்மோர் இன்னும் சற்று நேரத்தில் அமர உள்ளனர். விண்கலம் தரையிறங்க மொத்தம் 4 நிலைகளை கடக்க வேண்டும் – முதல் நிலையான விண்கலம் தயாராகும் பணி தொடங்கியது.

2ஆம் நிலை விண்கலம் பிரிதல், 3ஆம் நிலை சுற்றுவட்ட பாதையில் உயரம் குறைத்தல், 4ஆம் நிலை தரை இறங்குதல். விண்கலத்தில் அமர்ந்த பின்னர் விண்கலம் புறப்படுவதற்கு தயாராகும்.

இன்னும் 2 மணி நேரத்தில் விண்கலம் பிரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணியளவில் சுனிதா வில்லியம்ஸ் பூமியில் தரையிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button