தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளோம்: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளோம். இது எண்ணிக்கை பற்றியதல்ல, அதிகாரம் பற்றியது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளோம். இது எண்ணிக்கை பற்றியதல்ல, அதிகாரம் பற்றியது என்று தெரிவித்தார்.

காணொளி மூலம் உரையாற்றிய பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவரும் ஒடிசா முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக், ‘இது மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் மாநிலங்களின் ஜனநாயக உரிமைகளையும் பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்யும் முக்கிய கூட்டமாகும். மக்கள் தொகை கட்டுப்பாடு நமது வளர்ச்சிக்கு முக்கியமானது. மாநிலங்களின் பங்களிப்பினால் தேசிய திட்டம் பரவலாக்கப்பட்டது. மத்திய அரசு இதற்கு முன்னுரிமை அளித்தது. மாநிலங்களும் தங்களின் முயற்சிகளை வெற்றிகரமாக செயல்படுத்தின.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளன. இவை சாதிக்கவில்லையெனில், இந்தியாவில் மக்கள் தொகை வெடிப்பு ஏற்பட்டிருக்கும். இது நாட்டின் முன்னேற்றத்தை தடுமாறச் செய்திருக்கும்.
மக்கள் தொகையின் அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுவரையறை செய்வது நியாயமற்றது. ஒடிசா மக்களின் நலனை காக்க பிஜு ஜனதா தளம் முழுமையாக செயல்படும். அனைத்து அரசியல் கட்சிகளுடனும் மத்திய அரசு விரிவாக கலந்துரையாடி சந்தேகங்களைப் போக்க வேண்டும். இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி’ என்று தெரிவித்தார்.




