தமிழகம்

எந்தக் கொம்பனாலும் அணை கட்ட முடியாது: மேகதாது விவகாரத்தில் துரைமுருகன் காட்டம்

சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். காவிரி நதியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட திட்டமிட்டு வருகின்றது. ஆனால், இதற்கு தமிழக அரசு எந்தவிதமான அனுமதியும் வழங்காது என்றும், எந்தக் கொம்பனாலும் இந்த அணையை கட்ட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.


நீர்வளத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசும் போது, காவிரி நீர் பிரச்னை தொடர்பாக உச்சநீதிமன்றம் வரை தமிழக அரசு போராடி வந்துள்ளதாகக் கூறினார். “இந்த பிரச்சினையை நீங்களே பேசி தீர்த்துக்கொள்ளுங்கள்” என்று நீதிமன்றம் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். இதன்மூலம், நீர்பங்கீட்டு விவகாரத்தில் சட்டத்தின் மூலம் தீர்வு காண்பதில் சிக்கல்கள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


மேலும், கர்நாடக மாநிலத்துடனான நீர்பங்கீட்டு பிரச்னை அதிமுக ஆட்சியிலும் இருந்தது, திமுக ஆட்சியிலும் தொடர்கிறது என்றார். “அதிமுக ஆட்சியில் இருந்தபோது நீங்கள் (அதிமுக) பேசிக்கொண்டே இருந்தீர்கள், நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது நாங்களும் பேசிக்கொண்டே இருக்கிறோம்” என்று அவர் விமர்சித்தார்.


காவிரி நீர் பகிர்வு வழக்கில், ஏற்கனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு உரிய நீர் பங்கீடு கிடைக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மேகதாது அணை தொடர்பாக எந்த விதமான கட்டுமானத்திற்கும் அனுமதி வழங்கப் போவதில்லை என்று தமிழக அரசு தன் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.

இதனால், மேகதாது அணை விவகாரம் மீண்டும் தீவிர விவாதப் பொருளாக மாறி உள்ளது. கர்நாடக அரசும், தமிழக அரசும் தங்கள் நிலைப்பாடுகளில் உறுதியாக இருக்க, இதற்கான தீர்வு எப்போது வரும் என்பதே கேள்வியாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button