ஐபிஎல் தொடரில் அஸ்வின் அச்சுறுத்தலாக இருப்பார்- எல் பாலாஜி

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், எதிரணி அணிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எல்.பாலாஜி தெரிவித்துள்ளார்.
18-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான எல்.பாலாஜி அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:
இந்த 18-வது சீசனில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வருண் சக்கரவர்த்தி, சாய் சுதர்சன், ஷாருக்கான், மணிமாறன் சித்தார்த் உள்ளிட்ட பல தமிழக வீரர்கள் பல்வேறு அணிகளில் விளையாடி வருகின்றனர். இந்த வரிசையில் குர்ஜிப்னீத் சிங், ஆந்த்ரே சித்தார்த் ஆகியோருக்கும் இந்த சீசன் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை, பதிரனா ஏற்கனவே தனது திறமையை நிரூபித்துள்ளார். இந்த முறை இளம் வீரர் அன்ஷுல் கம்போஜ் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக சேப்பாக்கம் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளது. பந்துகள் நன்கு எகிறி வருவதோடு ஸ்விங்கும் கிடைக்கிறது. ஐபிஎல் போட்டிகள் இரவில் நடைபெறுவதால் குர்ஜிப்னீத் இந்த சீசனில் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கிறேன். சேம் கரன் ஏற்கனவே சிஎஸ்கே அணியில் விளையாடிய அனுபவம் இருப்பதால் அவருக்கு சேப்பாக்கம் மைதானத்தின் தன்மை நன்கு தெரியும். பேட்டிங்கிலும் பின்வரிசையில் சேம் கரன் பலம் சேர்க்கக் கூடியவர்.
ரவிச்சந்திரன் அஸ்வின் டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்தாலும், சிஎஸ்கே அணியில் அவரது பேட்டிங் வரிசை எப்படி அமையும் என்பதை கணிப்பது கடினம். ஏனெனில் சிஎஸ்கே பேட்டிங் வரிசை மிகவும் வலுவானது. விக்கெட்டுகள் விரைவாக சரிந்தால் மட்டுமே ரவிச்சந்திரன் அஸ்வினின் நிலையான பேட்டிங் திறன் பயன்படும். டாப் ஆர்டரில் ஐசிசி தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற ராகுல் திரிபாதி, டேவன் கான்வே, ஷிவம் துபே, ரச்சின் ரவீந்திரா, விஜய் சங்கர், தீபக் ஹூடா என பேட்டிங் வரிசை நீள்கிறது.
அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் சிஎஸ்கே அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள். சேப்பாக்கம் ஆடுகளம் எப்போதுமே ரிஸ்ட் ஸ்பின்னுக்கு சாதகமாகவே உள்ளது. இம்ரான் தாஹிர் இங்கு அதிக விக்கெட்களை வீழ்த்தி ஊதா நிறத் தொப்பியை வென்றது இங்கு குறிப்பிடத்தக்கது. இடதுகை ரிஸ்ட் ஸ்பின்னரான நூர் அகமதுவுக்கு சில திசைகளில் ஷாட்கள் அடிப்பது சிரமமாக இருந்தாலும், டேவன் கான்வேவே தொடக்க வீரராக களமிறங்குவார்.
அனுபவத்தை எப்போதுமே முன்னே வைக்கும் சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா, பதிரனா, சேம் கரண் ஆகியோர் முக்கிய இடம் பிடிப்பார்கள். என்னைப் பொறுத்தவரை, நூர் அகமதுவுக்கு வாய்ப்பு கிடைப்பது சற்று கடினம்.
இந்த சீசனின் முக்கியமான ஆட்டங்களில் அஸ்வின் நிச்சயம் விளையாடுவார். காயம் ஏற்பட்டால் மட்டுமே அவர் அணியில் இருந்து வெளியேறுவார். பவர் பிளே மற்றும் இறுதி ஓவர்களிலும் அவரால் சிறப்பாக பந்து வீச முடியும். கடந்த சில சீசன்களில் சிஎஸ்கே அணியில் அதிக ஆல்ரவுண்டர்கள் இருந்ததால் கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டது. மூன்றாவது சுழற்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு இல்லை. ஆனால் இந்த முறை அப்படி இல்லை. அதனால் அஸ்வின் இந்த சீசனில் தாக்கத்தை ஏற்படுத்துவார். சேப்பாக்கம் ஆடுகளத்தின் தன்மை அவருக்கு நன்றாகவே தெரியும் என்பதும் கூடுதல் பலம்.
கடந்த முறை ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய போது சேப்பாக்கத்தில் முக்கியமான கட்டத்தில் பேட்டிங்கில் 30 ரன்கள் எடுத்து, பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு முக்கிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். சேப்பாக்கம் மைதானத்தில் அவர் எப்போது விளையாடினாலும் ‘மேட்ச் வின்னராக’வே இருந்துள்ளார். இதனால் எதிரணி அணிகளுக்கு அஸ்வின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
வேகப்பந்து வீச்சாளர் கமலேஷ் நாகர்கோட்டி காயம் காரணமாக கடந்த சீசன்களில் சரியாக விளையாட முடியவில்லை. யு-19 உலகக் கோப்பை அணியில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு மீண்டும் ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல்தர கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டதால் தான் சிஎஸ்கே அவரை மீண்டும் தேர்வு செய்துள்ளது. 145 முதல் 150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் அவருக்கு இந்த சீசன் மிகவும் முக்கியமானது. ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் போன்று வெற்றிகரமான பாதையில் அவரும் பயணிக்க வேண்டும்.
சிஎஸ்கே அணியின் சுழற்பந்து வீச்சுத் துறை வலுவானதாக இருந்தாலும், கேகேஆர் அணியின் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் ஆகியோர் புதிர் ஸ்பின்னர்களாக உள்ளனர். இவர்களுக்கிடையே கடும் போட்டி நிலவும். என்னைப் பொறுத்தவரை இந்த சீசனில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.’ என அவர் தெரிவித்துள்ளார்.




