
சென்னை மே 20 2025:

யோகி டா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகா வரும் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார்கள். இவர்களின் திருமண அறிவிப்பு குறித்த பேச்சுதான் தற்போது மொத்த திரையுலகிலும் சரி, இணையவாசிகள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக உள்ளது. இந்நிலையில் விஷால் தனது திருமணம் குறித்து அறிவித்ததை அடுத்து, பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இயக்குநர் கௌதம் கிருஷ்ணா இயக்கத்தில் சாய் தன்ஷிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள படம் யோகி டா. இந்த படம் இன்னும் சில வாரங்களில் ரிலீஸ் ஆகவுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஷால், மூத்த நடிகர் டத்தோ ராதா ரவி, இயக்குநர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

காதலில் விழுந்தேன் :
இதில் விஷால் பேசும்போது, தானும் தன்ஷிகாவும் காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தெரிவித்தார். யோகி டா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இருவரும் தங்களது திருமணம் குறித்த அறிவிப்பை தெரிவித்தது படத்தின் புரோமோஷனுக்கு உதவியாக இருக்கும் என திரைத்துறையில் பேசி வருகிறார்கள்.

திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு, சாய் தன்ஷிகா மீதான காதலை வெளிப்படுத்தினார் நடிகர் விஷால்.
“இவங்க என்னோட BEST FRIEND-ஆ, SOULMATE-ஆ, என்னோட பாதியா, எப்படி சொல்வது எனத் தெரியவில்லை. ஆனால் இவரை வாழ்நாள் முழுவதும் இதேப் போல சிரித்த முகத்துடன் சந்தோஷமாக வைத்திருப்பேன்” என நடிகர் விஷால் கூறினார்.

நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், லட்சுமி மேனன் கடைசியாக நடிகை அபிநயா வரை ஏகப்பட்ட நடிகைகளுடன் விஷால் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், கடைசியாக விஷால் காதலிக்கும் அந்த நபரை இன்று அதிகாரப்பூர்வமாக மேடையில் அறிவித்து தனது திருமண தேதியையும் சொல்லிவிட்டார். விஷாலை போலவே நடிகை சாய் தன்ஷிகாவும் தங்கள் திருமண தேதியை ரசிகர்கள் மற்றும் மீடியாவுக்கு முன்பாக வெளிப்படையாக அறிவித்துள்ளார்.




