தமிழக சட்டசபையில் சுனிதா வில்லியம்சுக்கு பாராட்டு

சர்வதேச விண்வெளி மையத்தில் (ஐ.எஸ்.எஸ்) 287 நாட்கள் தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் அவர்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விண்வெளி வீரர் வில்மோருடன் சென்ற சுனிதா, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்குத் திரும்ப முடியாமல், அங்கேயே தங்கள் பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார். இந்த நிலையில் ஃபால்கன் 9 ராக்கெட்டுடன் சென்ற டிராகன் விண்கலம் மூலம், சுனிதா உள்ளிட்ட நால்வர் பத்திரமாக பூமி திரும்பினர். சுனிதா வில்லியம்சையும் , அவரை பத்திரமாக பூமிக்கு அழைத்து வந்தவர்களையும் முதல்வர் பாராட்டினார்.

கடந்த ஜூன் மாதம் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் ஐ.எஸ்.எஸ். சென்ற சுனிதா மற்றும் வில்மோர், எட்டு நாட்கள் ஆய்வு பணிக்குப் பின் திரும்ப இருந்தனர். ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்களால் திரும்ப முடியவில்லை. 9 மாதங்களுக்குப் பிறகு, புளோரிடா கடலில் டிராகன் விண்கலம் மூலம் இருவரும் பத்திரமாக திரும்பினர். அவர்களுடன் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்களும் வந்தனர். பிரதமர் உள்ளிட்ட பலரும் சுனிதாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.




