செங்கோட்டையன் - அமித் ஷா ரகசிய சந்திப்பு: பரபரக்கும் அரசியல் களம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் டெல்லியில் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு, தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரகசிய பயணம் – முக்கிய சந்திப்பு
செங்கோட்டையன், சென்னையிலிருந்து மதுரை வழியாக ரகசியமாக டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அமித் ஷாவை சந்தித்ததோடு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அவர் நேரில் சந்தித்துள்ளார். இந்தக் கூட்டத்தின் நோக்கம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
எடப்பாடி பழனிசாமிக்கு அதிருப்தியா?
இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அமித் ஷாவை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், செங்கோட்டையனின் தனிப்பட்ட சந்திப்பு, எடப்பாடிக்கு எதிராக அமைந்ததா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அண்ணாமலை முகாம் – பாஜகவின் புதிய அணுகுமுறை?
டெல்லியில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் முகாமிட்டுள்ள சூழலில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதனால், பாஜக – அதிமுக இடையே இன்னும் என்ன விதமான மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக வட்டாரங்களில்,”அதிமுவுக்கு பழனிசாமிதான் சிறந்த தலைமை. செங்கோட்டையன் தலைமை ஏற்க வாய்ப்பே இல்லை. கட்சியில் யாரை இணைத்துக் கொள்வது, தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதெல்லாம் முழுக்க முழுக்க பழனிசாமியின் முடிவுதான். அதிமுகவுக்கு தலைமையேற்கும் அளவுக்கு செங்கோட்டையன் திறன் பெற்றவர் இல்லை. பழனிசாமியின் அனுமதியின்றி சென்றிருந்தால், அவர் மீது பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.




